Thursday, March 17, 2011

வாஷிங்டன் vs மாயவரம்

நீராராடியாவின் டேப்புகளுக்குப் பிறகு‍ மத்திய மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க பிரதமரின் சுய விருப்பம் அல்லது‍ சுய உரிமை என நினைத்திருந்தவர்களுக்கு‍ பெருத்த ஏமாற்றம்தான் விளைந்தது.  கூட்டணி தர்மத்திற்காக பிரதமரின் விருப்பத்திற்கு‍ மாறாக ஒரு‍ சிலர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பது‍ சகஜமான ஒன்றாகி விட்ட காலமிது.  அதே போல கூட்டணி அமைச்சர்களை பதவியிலிருந்து‍ நீக்குவது‍ என்பதும் பிரதமரின் அதிகாரத்திற்கு‍ அப்பாற்பட்ட ஒன்றான விஷயமாகவும் மாறி, அவ்வாறு‍ நீக்க கூடாது‍ என்பதை ஒரு‍ மரபாகவே மாற்றியும் விட்டார்கள்.

ஆனால் சொந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை சில நேரம் பிரதமர் வெளியேற்றும் போதோ அல்லது‍ இலாகா மாற்றத்தை ஏற்படுத்தும் போதோ பெரிய சலனம் இருப்பதில்லை. 

ஆனால் சில ஆண்டுகளுக்கு‍ முன் தன் கட்சியை சேர்ந்த ஒரு‍ மத்திய அமைச்சரின் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) இலாகாவை திடீரென்று‍ பிரதமர் பிடுங்கி வேறு‍ ஒருவருக்கு‍ கொடு்த்த போது‍ தமிழகத்தில் சிறு‍ சலசலப்பு ஏற்பட்டது.  கூட்டணிக் கட்சிகளே ஆச்சர்யத்துடன் புருவம் உயர்த்தின.  இதற்கும் அவர் தன் துறையில் வெகு‍ திறமையாக பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.  மிக முக்கியமான ஒரு‍ ப்ராஜக்ட் அவர் பணியாற்றிய காலம் வரையில் பிரபலமாக ஊடகத்தில் வலம் வந்து‍ கொண்டிருந்தது.  அவருக்குப் பிறகு‍ அந்த பிராஜக்‌ட் பற்றிய எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை.

பீடிகை போதும் என நினைக்கிறேன்.  சம்பந்தப்பட்ட அமைச்சர் மயிலாடுதுறை   உறுப்பினர்   மணிசங்கர் ஐயர்.     பரபரப்பான    அந்த ப்ராஜக்ட், ஈரானிலிருந்து‍ குழாய்   மூலம் பெட்ரோலியத்தை ஆப்கன் மற்றும் பாக். வழியாக இந்தியாவி்ற்கு‍ கொண்டு‍ வருவது.  ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.  

தரம்சிங் கர்நாடக முதலமைச்சராக இருந்த பொழுது‍ கர்நாடக சட்டசபையில் ஒரு‍ முறை, கர்நாடகத்திற்கு‍ வர இருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை ஐயர் தமிழ்நாட்டிற்கு‍ கொண்டு‍ செல்ல இருந்ததாகவும், பிரதமர் தலையிட்டு‍ கர்நாடகத்திற்கு‍  அந்த  நிலைய்தை கொண்டு‍ வந்ததாகவும் குறிப்பிட்டார்.  இந்த ஊடலில் (?) ஐயரின் பதவி காலி ஆயிற்று‍ எனவும் ஹேஸ்யம் கூறினார்.

அன்றைய செய்திதாள்களில் சின்ன பத்தி செய்தியாக ஒரு‍ மூலையில் இச்செய்தியை படித்த ஞாபகம். ஆனால் இப்போது‍ விக்கி லீக்ஸ் வெளியிட்ட    குறிப்புகளில்  அமெரிக்காவுக்கு‍ ஆதரவாக செயல்படக்கூடிய அமைச்சருக்கு‍ பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஐயரை தூக்கினார்கள் எனறு‍ செய்தி வெளியிட்டிருக்கிறது.

கண்ணுக்குத்‍ தெரியாத பல ஆக்டோபஸ் அதிகார கரங்கள் எப்படியெல்லாம் இந்திய ஜனநாயகத்தில் அலைந்து‍ கொண்டிருக்கின்றன என்பதற்கு‍ இந்த நிகழ்வை உதாரணமாக கொள்ளலாம்தானே.




No comments:

Post a Comment