Tuesday, March 15, 2011

தேர்தல் கமிஷன்

கூட்டணி உண்டா இல்லையா? பிரிந்தால் ஸ்பெக்ட்ரம் என்னவாகும்?  அங்கே சென்று‍ விடுவார்களா?  ஏற்கனவே இருப்பவர்களுக்கு‍ பிரித்தது‍ போக இவர்களுக்கு‍ எவ்வளவு கொடுப்பார்கள்? கிடைப்பதை பெற்றுக் கொண்டு‍ இவர்களும் திருப்தியடைவார்களா?  நடிகர் கட்சிக்கு‍ எவ்வளவு?  அவரும் இங்கேயா?  அல்லது‍ அங்கேயா?  என்று‍ தமிழக மக்கள் ஒரு‍ பக்கம்,  மண்டையை உடைத்து‍ கொண்டிருக்க, மற்றொரு‍ புறம் புலனாய்வு பத்திரிகைகள் தன் பங்கிற்கு‍ வாரம் இரு‍ பட்டாசுகளை கொளுத்தி போட, இணையமும் தன் பங்கிற்கு‍ தனி ஆவர்தனத்தில் இறங்கி ஹேஸ்யம் கூற ஒரே பரபரப்பு எங்கும் பரயிவிருந்தாலும் மே மாதம் தேர்தல்; ஏப்ரலின் மத்தியில் அது‍ சூடு‍ பிடிக்கும் என அசமந்தமாக (அரசியல் கட்சிகள் உட்பட) எல்லோரும் இருந்த வேளையில், ஐந்து‍ மாநில தேர்தல் துவங்கும் முதல் நாளே தமிழகத்தி்ற்கு‍ ஒரே கட்ட தேர்தலை ஆணையம் அறிவித்து‍ நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று‍ தன்னை நிரூபித்திருப்பது‍ கூட ஒரு‍ அதிரடி‍ அரசியல்தான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எல்லா கட்சியும் தேதியை மாற்றக்கோரி ஒற்றுமையுடன் (!) கோரிக்கை வைக்கும் என்று‍ முன் கூட்டியே தேர்தல் ஆணையம் நிச்சயம் யோசிக்கமாலிருந்திருக்காது. அட்டானமஸ் என்பதால் எடுத்த முடிவில் நிலையாக இருந்தது‍ கூட வியப்பில்லைதான்.

ஆனால் எல்லா கட்சிகளும் வெகுவிரைவில் கூட்டணியை தீர்மானிக்கவும், போட்டியிடுவதற்கான இடங்களை முடிவு செய்து‍ உடனே மனுதாக்கல் செய்வதற்கான காலத்தை குறுக்கி வைத்து‍ அவர்களை அதீதமான அரசியல் தந்திரங்கள் செய்ய விடாமல் தடுத்தது‍ சூப்பர்ப்.

மே முதல் வாரத்தில் தேர்தல் என்று‍ எல்லோரும் நினைத்த மாதிரி அறிவித்திருந்தால் பணப்பட்டுவாடாவுக்கு‍ முன் கூட்டியே அழகாக ரூட் போட்டு‍ கொடுத்தது‍ மாதிரி ஆகிவிடும்.  தேதியை அறிவித்த உடனேயே வருவாய் துறையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி அதிகமான தொகை எடுத்துசெல்லும் வாகனங்களை சோதனைக்கு‍ உட்படுத்தி கிலியை ஏற்படுத்‌துவது‍ நமக்கு‍ ரொம்ப புதுசு.  (ஆமாம் இந்த வாகனச் சோதனை திருமங்கலத்தை தன்னகத்தே கொண்ட தமிழகத்திற்கு‍ மட்டும்தானா?  அல்லது‍ மற்ற நான்கு‍ மாநிலத்திற்கும் உண்டா?) 

இதுவரை 20கோடி ரூபாய் தொகை சரியான ஆவணங்கள் இல்லாமல்,  சிக்கியிருப்பதைப் படித்த எனது‍ நண்பர் சொன்னார். தேர்தலுக்கு‍ முந்தைய நாள் தேர்தலை ஒத்தி வைத்து‍ விட்டு‍, மாநில நிர்வாகத்தை தேர்தல் ஆணையமே சில மாதங்களுக்கு‍ மேற்கொண்டால் நன்றாக இருக்கும் போல் தெரிகிறதே. எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்க்கமாட்டமா?   என்று‍    சிம்புவை    வேறு‍      துணைக்கழைத்தார்

அரசியல்வாதிகளுடன் பழகிப்பழகி, ஏன் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுத்து‍ சான்றிதழ் கொடுத்து‍ சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்‌ அனுப்பும் தேர்தல் ஆணையம், தானும் சரிக்கு‍ சரியாக அவர்களுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தயாராகிவிட்டது.  தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு‍ மைல்கல்தான்




No comments:

Post a Comment