Friday, March 25, 2011

இலவச அறிவிப்புகள்

மாறி மாறி இரு‍ கழகங்களும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டதில் சாமானிய தமிழன் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் இருக்கிறான்.  நேற்று‍ வரை இலவசம் கூடாது‍ என சொல்லிக் கொண்டு‍ இருந்தவர்கள் தேர்தல் ஜுரத்தில் ஆடு, மாடுகளை எல்லாம் சேர்த்து‍ சொல்லி விட்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவு காரணமாக இருக்கலாம்.  ஆனால் யார் வந்தாலும் இரண்டு‍ ஆண்டுகளில் குறைந்தது‍ ஐம்பது‍ சதத்தையாவது‍ நிறைவேற்றி ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் இன்னும் இரண்டு‍ ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபம் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம். 

அவர்களாவது‍ போன தடவை சொல்லிய மாதிரி சிலவற்றை கொடுத்து‍ விட்டார்கள்.  ஒருவேளை இப்போது‍ இவர்கள் வந்து‍ விட்டால், அவர்களைப் போலவே கொடுத்து‍ ஆக வேண்டிய கட்டாயம் வந்து‍ விடும்.  இல்லாவிட்டால் இவர்கள் சொன்ன இலவச அறிவிப்புகளே ஆப்புகளாக மாறவிடக் கூடிய அபாயம் அதிகம். 

இன்னொறு‍ விஷயம்  அவர்கள் வந்து, ஏதும் கொடுக்க முடியாவிட்டாலும் கூட பெயரில் முன் பாதி இருக்கிறது, ஆனால் என் செய்ய பின்பாதிதான் பற்றாக்குறை என்பது‍ போல ஏதாவது‍ பேசி, நிலைமையை ஒத்திப் போடலாம் அல்லது‍ இலவசங்களை தராமல் போன தடவை கொடுத்ததையே திருப்பி திருப்பி சொல்லி சமாளிக்கலாம்.  ஆனால் இவர்களுக்கு‍ எந்த வித சாய்ஸ்ம் இல்லை என்றே நினைக்கிறேன்.   ஆட்டம் கொஞ்சம் சூடாகத்தான் ஐந்து‍ ஆண்டுகளும் இருக்கும்.

இலவச அறிவிப்புகளை அறிவித்ததன்  மூலம் இருவருமே மக்களிடமிருந்து‍  சம   தொலைவில்தான்   இருக்கிறார்கள்.  2G தவிர்த்து‍ பார்த்தால் (?)   பிரச்சாரமே    மக்களிடம்     எடுபடும் என்று‍ நினைக்கிறேன்.   பிரச்சாரத்தின் வீச்சும், அடர்த்தியும் எந்த அளவிற்கு‍ பலம் பெறுகிறதோ அந்த அளவுக்கு‍ வோட்டு‍ வங்கியின் பலமும் கூடலாம்.  இந்த நேரத்தில்தான் புரட்சிப்புயல் போன்ற பேச்சாளர்களின் தேவை இவர்களுக்கு‍ தேவைப்படுகிறது.  ஆனால் என்ன செய்ய, அதீதமான தன்னம்பிக்கை (தன் மேல் +  மக்கள் மேல் + 2G) காரணமாக அவரை கழட்டிவிட்டது‍ எந்தளவிற்கு‍ பின்னடைவை தரும் என்பது‍ மே-ல் தெரிந்து‍ விடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் கட்அவுட் மற்றும் கூம்பு ஒலி பெருக்கிகளுக்கு‍ சேஷன் முட்டுக்கட்டையிட்டார்.   இப்போது‍ சுவரை அலங்கோலமாக்கும் சுவர் விளம்பரம், கொடி‍, தோரணம், பண விநியோகம், செலவு கணக்கு‍ என பலவற்றி்ற்கான கணகாணிப்பை பலப்படுத்தியிருக்கிறது‍ ஆணையம்.   இனி வரும் காலங்களில் -  அடுத்த எம்.பி தேர்தலிலேயே இந்த இலவச அறிவிப்புகளுக்கான தடையை ஆணையத்திடம் எதிர்பார்க்கலாம் என கருதுகிறேன்.

பி.கு‍: தேர்தல் தேதியை அறிவித்து‍, தேர்தல் பிரச்சாரத்தின் போது‍ இலவச அறிவிப்புகளை வெளியிட்டால்தானே சிக்கல்.  ஆறு‍ மாதத்திற்கு‍ முன்பே அறிவி்த்து‍ விட்டால் பிரச்சனை வராது‍ என்று‍ முன் கூட்டியே சொல்லி விடுவார்களோ.  வாழ்க ஜனநாயகம்

No comments:

Post a Comment