Monday, March 28, 2011

அஞ்சறைப் பெட்டி‍

எங்கள் ஊர் சிவன் கோயிலில் சிவராத்திரி உற்சவம்.  ஒரு‍ வார கொண்டாட்டம். தினமும் மாலையில் பஜனை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு என திருவிழா களை கட்டும்.  இந்த வருடம்  சொற்பொழிவு வாசுகி மனோகரன்.  எதிர்பார்த்த கூட்டம் பந்தலில் இல்லை.  வருடப்பிறப்பு, பிரதோஷம் தவிர மற்ற நாட்களில் எங்கள் பகுதி மக்கள் யாரும் கோயிலில் உள்ள சாமிகளை தொந்தரவு செய்வதில்லை.  எனவே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு‍  அரை மணி நேரம் முன்பிருந்தே யாரோ ஒருவர் மைக்கில் பக்தர்களை வலுக்கட்டாயமாக பந்தலுக்கு‍ள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.  அப்படியும் பந்தலுக்குள் சொற்ப அளவிலான கூட்டம்தான்.  பெரும்பாலும் சீனியர்ஸ்.

நிகழ்ச்சி துவங்கியது.  எளிமையான பந்தலலங்காரம்.  கம்பீரத்துடன் பேச்சை துவக்கியவர், சொற்ப அளவிலான கூட்டத்தை பார்த்து‍ துணுக்குறாமல்,   அட்டகாசமான ஒரு‍ பஞ்ச் கொடுத்தார் வாசுகி.  பொது‍க்கூட்டம் என்றால் எல்லோரும் வருவர்.  ஆனால் இங்கு‍ நடப்பதோ கலெக்டர்கள் மாநாடு.  எனவே வி.ஜ.பிக்களுக்கு‍ மட்டும்தான் இடம்.  அவர்களுக்குத்தான் இந்த இடத்தின் மதிப்பு புரியும், தெரியும்.  கூட்டம் கைதட்டி‍ ஆரவாரி்த்தது.

********************
ஆறாம் வகுப்பு படிக்கும் போது‍ மணியின் மௌன ராகத்தை முதன்முதலில் டெக் என்ற ஒரு‍ சமாச்சாரத்தில் என் பெரியப்பா வீட்டில் பார்த்தேன்.  கலர் டிவி, ரிமோட், டெலிபோன், டெக், பிரிட்ஜ் என அப்போதைய பல புதிய வரவுகளை அங்குதான் முதன்முதலில் நான் பார்ப்பது‍ வழக்கம்.  தலையணை சைஸ் வீடியோ கேசட்டையும் முதன்முதலில் பார்த்தது அங்கேதான்.  தஞ்சையிலிருந்த வீடியோ கேசட் வாடகைக்கு‍ விடும் கடையிலிருந்து‍ ஒரு‍ பையன், முப்பது‍ - நாற்பது‍ கேசட்டுகளை ஒரு‍ பையில் போட்டு,‍ சைக்கிளில் சுமார் பத்து‍ கிலோமீட்டர்  மிதித்து‍  வந்து‍ வேண்டியதை கொடுத்துவிட்டு‍ செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் மௌனராகம் கேசட் டெக் வாங்கும் போதே இலவசமாக கொடுத்தார்களா அல்லது‍ விலைக்கு‍ வாங்கியதா எனத் தெரியவில்லை.  கோடை விடுமுறை முழுவதும் அங்கிருந்த நாட்களில் பல தடவை அத்திரைப்படத்தை  பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு‍ப் பிறகு‍ அந்தப் படத்தை நேற்று‍ டிவியில் பார்த்தேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு‍ பார்க்கும் போதும் படம் சுவாரஸ்யம் குறையாமல் இக்காலத்திற்கு‍ ஏற்றவாறும் இருந்தது‍ வியப்பாக இருந்தது. (ஒரு‍ சில காட்சிகள் தவிர)

வி.கே.ஆர் மற்றும் மெக்கானிக் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளின் போது‍ விழுந்து‍ விழுந்து‍ சிரித்த ஞாபகம்.  இப்போது‍ அந்த சீன்கள் புன்னகையைக் கூட வரவழைக்கவில்லை. 

ஒரு‍  எம்.டி.‍ தன்னுடைய ஊழியரை வி.கே.ஆரைப் போல நடத்துவாரா என்பது‍ மிகப்பெரிய கேள்வி. 

பாடல் காட்சிகளின் சுவாரஸ்யம் இன்னும் குறையவில்லை.  (பனி விழும் இரவு ....... பாடல் காட்சிக்கு‍ ஆடிய  அந்த தாடிக்காரர் யார்?  இப்போது‍ எங்கே இருக்கிறார்?)

இறுதியாக ஒரு‍ ஆசை.  இயக்குநர் இந்தப் படத்தை அதே மோகன் மற்றும் ரேவதியைக் கொண்டு‍ விட்ட இடத்திலிருந்து‍ பார்ட் டூ எடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment