Thursday, March 24, 2011

வராஹி சுவாமிகள்

சைவம்தான் சிறந்தது.  அசைவம் என்பது‍ ஒரு‍ உயிரைக் கொன்று‍ புசிப்பதால் அது‍ மனிதகுலத்திற்கு‍ விரோதமானது.  ஒவ்வொரு‍ தாவரத்திற்கும் உயிர் உண்டு‍  என்பதை   அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இரண்டுமே ஒப்புக் கொள்கின்றன.  அப்படியென்றால் கீரையை வேரோடு‍ பிடுங்கி சமைத்து‍ உண்கின்றோமே, அது‍ பாவம் இல்லையா?

எலுமிச்சம் பழத்தை கோயிலில்‍ கொடுப்பது‍  ஏன்?

எந்தவித நோயும் குழந்தைகளை அண்டாமல் இருக்க கொடுக்க வேண்டிய மருந்து‍ எது?

எங்கள் பகுதி காந்தி சர்வோதயசங்கத்தில் பணியாற்றும் திரு.கண்ணன் அவர்கள் ஒரு‍ நல்ல காரியத்தை சத்தமில்லாமல் செய்து‍ வருகிறார்.  தினமும் காலை ஆறு‍ மணி முதல் ஏழு‍ முப்பது‍ வரை கடை வாசலில் அருகம்புல் சாரு, வாழைத்தண்டு‍ சாறு‍ மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு‍ ஆகியவற்றை, அன்றன்றைக்கு‍ தயார் செய்து‍ விற்று‍ வருகிறார்.  ஆரம்பத்தில்‌ சற்று‍ டல்லடித்த வியாபாரம் விஷயம் தெரிந்தவர்களின் பேராதராவினால் இப்போது‍ வெகு‍ சுறுசுறுப்பாக  போய்க் கொண்டு‍ இருக்கிறது‍ என்பது‍ மகிழ்வான செய்தி.  குறிப்பாக காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்கு‍ செல்பவர்கள் மற்றும் நீரிழிவுக்காரர்கள் இந்த வாய்ப்பை நன்கு‍ பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையாகச் சொல்கிறேன், உங்கள் பகுதியில் யாராவது‍ இதுபோல விற்பனை செய்து‍ கொண்டிருந்தால் அருகம்புல் சாறை தவறாமல் வாங்கி அருந்துங்கள். காரணம் கடந்த சில மாதங்களாக என் தலைமுடி‍ சகட்டு‍ மேனிக்கு‍ கொட்டிக் கொண்டிருந்தது.  எங்கள் குல வழக்கப்படி‍ முப்பது‍ வயதைத் தாண்டும் போது‍ தலையில் பாதியிடம், காலி மனையாக இருக்க வேண்டும். இந்த வழக்கத்தை என் தந்தை மற்றும்  தம்பிகள் விதியை நொந்தபடி‍ ஏற்றுக் கொள்ள, எனக்கோ என் தாயின் உடல் வாகு சற்று‍ ஆறுதலைக்  கொடுத்தது.  அருகம்புல் போல தலைமுழுதும் முடிக்கற்றைகள்  பழைய பட ராம்கி போல அலைபாயும். 

திடீரென்று‍ சகட்டுமேனிக்கு‍ முடி‍ கொட்ட ஆரம்பிக்க நானும் மனதளவில் தயாராகி விட்ட சமயம்,  இந்த அருகம்புல் சாறு‍ எனக்கு‍ கை கொடுத்  ........... ஸாரி தலைமுடி‍ கொடுத்தது.  ஆமாம் கடந்த இரு‍ மாதங்களாக தினமும் ஒரு‍ டீகப் அளவில் இந்த சாறை குடித்த புண்ணியம் முடி‍ கொட்டுவது‍ கிட்டத்தட்ட நின்றே விட்டது‍. 

அருகம்புல் சாறுடன் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் வில்வ  இலையையும் சேர்த்து‍ பிழியப்பட்ட சாறு‍, இரத்தத்தில் உள்ள நச்சுகளை பிரித்து‍ எடு்க்கிறது‍; மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.  பெண்களுக்கு வரும் பலவித பிரச்சனைகளுக்கு‍ இது‍ ஒரு‍ அருமருந்து.  குறிப்பாக இதில் உள்ள செல்லுலோஸ் மற்றும்  குளோரோபில் பல மருத்துவ குணநலன்கள் உடையன.

நண்பர்களிடம் சென்ன போது‍ ஹி.............ஹி   ................ ஆடு‍ மாடுகளுக்கு‍  போட்டியா நாங்க வரல...... என்று‍ ஒதுங்கி கொண்டார்கள்.  அவற்றை சாப்பிடும்போது‍ வராத இரக்கம் இப்போது‍ மட்டும் எங்கிருந்து‍ வந்தது‍ என கேட்டேன்.

மேற்சொன்ன கண்ணன் அவர்களும், சேவாப்பூர் மாணிக்கம் என்ற யோகாப் பேராசிரியருமாக சேர்ந்து‍ அருகிலுள்ள ஒரு‍ பள்ளியில் சிறு‍ நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறன்று‍ ஏற்பாடு‍ செய்து‍ அதை வாடிக்கையாளர்களிடம் கூறி எல்லோரையும் அவசியம் வருமாறு‍ அழைத்திருந்தாரக்ள்.   தலைப்பு: இயற்கை உணவு மற்றும் உடல்நலம்.  பேசுபவர் சுவாமி வராஹி சுவாமிகள்.  அனுமதி இலவசம்.

ஆனால் நம்மாட்கள் ஞாயிறன்று‍ பல உயிர்களுக்கு‍ கதி மோட்சம் கொடுக்க சென்று‍ விட்டதாலும், கிரிக்கெட் வேறு‍ இடையில் புகுந்ததாலும் நிகழ்ச்சி சொன்னபடியே சிறு‍ நிகழ்ச்சியாகவே அமைந்து‍ போனது.  ஆமாம் வந்தது‍ எண்ணி எட்டு‍ பேர்.  ஆனாலும் எந்த முகச் சுளிப்பையும் காட்டாது‍ சுவாமிகள் கலந்து‍ கொண்டு‍ பல இயற்கை உணவுகளைப் பற்றியும், மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டது‍  பயனுள்ளதாக இருந்தது.

அங்கு‍ அவர் கேட்ட கேள்விதான் மேலே உள்ள முதல் மூன்று பத்திகளும்.

1)  ஒரு‍ உயிரை கொன்றால், உதாரணமாக ஆட்டை கொன்றால் அதை உருவாக்கும் திறமை மனிதனுக்கு‍ இல்லை.  ஏதாவது‍ இரு‍ ஆடுகள் மனது‍ வைத்தால்தான் மூன்றாவது‍ ஒன்று‍ உருவாகும்  ஆனால் தாவரங்கள் அபப்டியல்ல.  உற்பத்தி செய்யும் வித்தை, முறை மனிதனுக்குத்‍ தெரியும்.  எனவே சைவம்‌ சிறந்தது.

2)  காலையில் தியானம் செய்வது‍ சிறந்தது.  படிப்பது‍ கூட மனதில் அப்படியே பதியும்.  இவையெல்லாம் ஏன்? எப்படி?  காற்றில் உள்ள ஓசோன் சக்தி பூமியில் காலை நேரத்தில் பரவியிருப்பதுதான் காரணம்.  இந்த சக்தி மனித உடலில் புகுந்து‍ பலவிதமான தூண்டுதல்களை செய்கிறது.  மனதை அமைதிபடுத்தி, நினைவாற்றலை தூண்டுகிறது. 

காலை நேரம் தவிர மற்ற நேரங்களில் இதை எப்படி‍ பெறுவது?  கோயில் கோபுர கலசங்கள் செம்பால் ஆனவை.  இதற்கு‍ ஒரு‍ சிறப்பம்சம் உண்டு.  ஓசோனை சேகரித்து‍ அப்படியே கோயில் கருவறையில் சுவாமி சிலை இருக்கும் இடத்திற்கு‍ அனுப்பி விடும். சரி அதை எப்படி‍ வெளியில் நின்று‍ கும்பிடும் நாம் பெறுவது?  அதை எப்படி‍ வீட்டுக்கு‍ எடுத்துச் செல்வது(?) இங்குதான் வருகிறார் திருவாளர் எலுமிச்சை.  ஆமாம் இந்தப் பழத்திற்கு‍ ஓசோனை பிடித்து‍ வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டாம்.  எனவேதான் கோயி்லில் இநத் பழத்தை நமக்கு‍ தருகிறார்களாம். 

தினமும் எலுமிச்சை சாறு‍ அருந்துவது‍ சாலச் சிறந்தது.  குறைந்தபட்சம் ஊறுகாயாவது.

3) குழந்தைகளுக்கு‍ கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு‍, மிளகு, திப்பிலி  (இன்னும் இரண்டு‍ நினைவுக்கு‍ வரவி்ல்லை)  சேர்த்து‍ இடித்...... ப்ச்....ப்ச் ..... ஏன் அவ்வளவு வேலை, நாட்டு‍ மருந்து‍ கடையில் விற்கும் திரிபலாசூர்ணம்  மற்றும் திரிகடுகுசூர்ணம் இரண்டையும் சமஅளவில் கலந்து‍ தேனில் குழைத்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் உடல் ஆரோக்கியம்   மேம்படும்.

சுவாமிகள் மலையடிவாரத்தில் ஒரு‍ ஆசிரமம் அமைத்து‍ அனாதை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் வாழ்வளித்து‍ வருகிறார். வராஹி விஜயம் என்ற புத்தகம் மாதாமாதம் அவரின் டிரஸ்டிலிருந்து‍    வெளிவருகிறது.   அவர் கூறிய ஒரு‍ சில விஷயங்கள் உங்களுக்காக.

நமக்கெல்லாம் சுடுகாடு‍ தென்திசையில்.  ஆடு, மாடு‍. மீன்களுக்கு‍ நம் வயிறே சுடுகாடு.

குக்கரிலிருந்து‍ வெந்த சோறை உடனே ஒரு‍ பாத்திரத்தில் சூடாக கொட்டி‍ வைத்து‍ விட்டால் கேஸ் தொந்தரவு நமக்கு‍ வராது.

ஞாயிறன்று‍ கண்டிப்பாக அசைவம் கூடாது‍ (!)

இரவில் தயிர் வேண்டாம்.

முள்ளங்கியை மிளகு, உப்பு தூவி, வடநாட்டவர் உண்பது‍ போல அப்படியே சாப்பிடலாம். வெள்ளரிக்காய் போல.

தயிர் + வாழைப்பழம், மோர் + வாழைப்பழம் கூட்டணி ஆகவே ஆகாது.

வட்டச்சூர்ணக்கீரை, துவரம் பருப்பு சம அளவு அரைத்து‍ தலையில் பற்று‍ போட்டால் எப்படிப்பட்ட தலைவலியும் குணமாகும்.

நேந்திரங்காயை வெட்டி‍ (பழம் அல்ல) வெயிலி்ல் காய வைத்து‍, பொடித்து‍, சலித்து‍ அதை தண்ணீர் அல்லது‍ பாலில் கலந்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் எவ்வித டப்பா பவுடரும் தேவையில்லை.

வாழைப்பழத்தைப் பிழிந்து‍ சாறு‍ எடுக்க முடியுமா?  பிழிந்தால் ஸாரி பிசைந்தால் பஞ்சாமிர்தம்தான் கிடைக்கும்.  சாறு‍ எடுப்பது‍ எப்படி?   அருகம் புல்லின் பக்கவாட்டு‍ இலைகளை நீக்கி விட்டு, நடு‍ தண்டுப்பகுதியை துண்டுகளாக்கி பழத்துடன் சேர்‌த்து‍   வெயிலில் சிறிது‍ நேரம் வைத்தால் பழத்திலுள்ள நீர் பிரிந்து‍ வந்து‍ வி்டும். அச்சாறு‍ கண்புரை  நோய்க்கு‍ ஏற்ற மருந்து‍.

விரதமிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அமாவாசை, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் அகத்திகீரையை கண்டிப்பாக தொடக்கூடாது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பூமிக்கடியில் விளையும் எதையும் மூச்.............

நிகழ்ச்சியின் இறுதியில் அவலும், பேரிச்சையும் கொடுத்து‍ அழகாக முடித்து‍ வைத்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.   சின்ன செலவுதான்.  ஆனால் பலனோ அபரிமிதம்.  நன்றி திரு.கண்ணன் மற்றும் மாணிக்கம் ஐயா.

No comments:

Post a Comment