Thursday, March 31, 2011

சின்ன (அதிகப்பிரசங்கித்தனமான) சந்தேகங்ணா!

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி மற்றும் இந்தியப் பிரதமர் இருவருமாக சேர்ந்து‍ நேற்று‍ கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியை மொகாலி மைதானத்தில் அருகருகே அமர்ந்து‍ ரசித்து‍ பார்த்தது‍ ஒரு‍ செய்திதான்.  ஆனால் அவர்கள் அமைதியாக ரசித்‌து‍ பார்க்க தகுந்த பாதுகாப்பு சூழ்நிலையை உருவாக்க, பின்னணியில் இருந்து ‍ உழைத்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரை எண்ணிப் பார்க்கும் போதுதான் ஒரு‍ சின்ன சந்தேகம் வருகிறது.

கடந்த உலககோப்பையில் இந்தியா தோல்வியடைந்தபின், கபில்தேவ் ஐ.சி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கிரிகெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.  வரும்படி‍ வராமல் போகும் என்ற பயத்தில் அதற்கு‍ போட்டியாக  பி.சி.சி.ஐ.யும்  ஐ.பி.எல் என்ற அமைப்பை உருவாக்கி கல்லாவை திறம்பட கட்டி‍ வருகிறது‍  அப்போது‍ ஏற்பட்ட சலசலப்பில் ஒரு‍ விஷயம் மக்களுக்கு‍ தெளிவானது‍.  பி.சி.சி.ஐ என்பது‍ அரசாங்க அமைப்பல்ல.  தனியார் அமைப்புதான்.  இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட்டை நடத்தும் ஒரு‍ சங்கம் மட்டுமே.  ஆனால் கைப்புள்ள சங்கத்துடன் ஒப்பிட முடியாதபடிக்கு‍ கோடிக்கணக்கான ரூபாய்களை சொத்தாக கொண்ட ஒரு‍ அமைப்பு.  எந்த இடத்தி்லும் இந்திய அரசுக்கு‍ கட்டுப்படவேண்டிய அவசியமில்லாத ஒன்று.

சரி என்னுடைய சந்தேகத்துக்கு‍ வருகிறேன்.  எங்கு‍ மேட்ச் நடந்தாலும் சரி, நுழைவுச்சீட்டு‍ வாங்கும்போது‍ ரசிகர்களை அடித்து‍ உதைத்து‍  வரிசையில் ஒழுங்குபடுத்துவதிலிருந்து, வந்த வெளிநாட்டு‍, உள்நாட்டு‍ வீரர்கள் ஆட்டம் முடிந்து‍ பாதுகாப்பாக  ஊர் போய் சேருவதிலிருந்து‍  பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெறும் பொறுப்பு காவலர்களுக்கு‍ உண்டு. சில நேரங்களில் இராணுவத்தையும் ஈடுபடுத்தி பாதுகாப்பை பலபடுத்துகிறார்கள். 

ஒரு‍ தனியார் அமைப்பு நடத்தும் விளையாட்டு‍ போட்டிக்கு‍ அரசு‍ அமைப்பான காவல்துறையையும், இராணுவத்தையும் பாதுகாப்பிற்காக  துணைக்கு‍ அழைக்கும் போது‍  கட்டணமாக ஏதாவது‍ ஒரு‍ தொகையை  அரசுக்கு‍ அவர்கள் செலுத்துகிறார்களா?  விளையாட்டு‍ போட்டிக்கு‍ பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறைக்கு‍ கட்டணம் செலுத்த தேவையில்லை என்று‍ ஏதேனும் சலுகையை அரசிடம் பெற்றிருக்கிறார்களா?  இல்லை இவ்வாறு‍ இண்டர்நேஷனல் மேட்ச் நடக்கும் போது‍ விஷயத்தை மட்டும் காவல்துறையிடம் தெரிவித்தாலே, இலவசமாக(!)  பாதுகாப்பு கொடுக்க வேண்டியது‍ அவர்களது‍ கடமையா?

ஒருகேட்சுக்கு‍ பத்தாயிரம், Fourஅடித்தால் ஒரு‍ தொகை, சிக்ஸ் என்றால் ஒரு‍ தொகை, நூறு‍, ஐம்பது‍ என   அடித்தால் கணிசமான தொகையை வீரர்களுக்கு‍ அள்ளி வழங்கும் சங்கம் டிக்கெட் விற்பனையிலும், விளம்பர வருவாயிலும், டிவிக்களுக்கு ஒளிபரப்பு உரிமையை கொடுப்பதிலும் சங்கம் ‍ ஒரு‍ கணிசமான தொகையை பார்த்து‍ விடுகிறது. எனவே பாதுகாப்பிற்கென கட்டணம் செலுத்துவதில் எந்த நிதிச் சிக்கலும் (!) அவர்களை அண்ட வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.  

எல்லோருடைய நாட்டுப்பற்றையும் (பிரதமர், முதலமைச்சர்கள் உள்பட) காசாக்க தெரிந்த இந்த அமைப்பிற்கென்று‍ என்னவிதமான சமூக நலச் சிந்தனை இருக்கிறது‍ என்பது‍ம் மேற்படி‍ சந்தேகத்தின் கிளை சந்தேகம்தான்.

பி.கு‍:  நாடு‍ முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பரவலாக பரிட்சை நடந்து‍ கொண்டிருந்த சமயம்.  இரண்டாவது‍ ஐ.பி.எல்லை ஒரு‍ மாதம் ஒத்தி வையுங்கள் என்று‍ கோரிக்கையை வைத்த போது‍, எதற்காகவும் அட்டவணையை மாற்ற (புடலங்காய் அட்டவணை) முடியாது‍ என்று‍ வாதிட்டு‍ ஆட்டத்தை தெ.ஆப்பிரிக்காவிற்கு‍ மாற்றி அதே மாதத்தில் நடத்தி காட்டிய அஞ்சா நெஞ்சன்தான் நம்ப லலித் மோடி.

Tuesday, March 29, 2011

அட அப்படியா?

ஒரு‍ "நொடி"யின் அருமையை உணர வேண்டுமானால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரிடம் கேளுங்கள் என சொல்வது‍ வழக்கம்.  ஆனால் இந்த விஷயத்தை படித்தால், நீங்கள் இப்போது‍ அந்த சொலவடையை  பரிசீலனை செய்ய வேண்டியது‍ வரும். 

1969ஆம் ஆண்டு‍ விண்வெளி வரலாற்றில் ஒரு‍ மைல்கல்.  ஆம், அந்த வருடம்தான் முதன்முதலில் ஒரு‍ மனிதனின் காலடி‍ தடம் பூமிக்கு‍ வெளியே ஒரு‍ துணைக்கிரகத்தில் பதிந்தது.  பதிந்த இடம் நிலா, பதித்தவர் ஆம்‌ஸ்ட்ராங்.  இரண்டாவதாக பதித்தவர்‌ ஆல்டிரின்.  இதுவரைக்கும் பள்ளியில் படித்திருப்பீர்கள். 

ஆனால் முதன்முதலி்ல் காலடி‍ தடம் எடுத்து‍ வைக்க வேண்டியது‍ ஆல்டிரின் தானாம்.  அப்பல்லோ நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,‍ பைலட் பர்ஸ்ட் என கட்டளை வருகிறது.  ஆனால் ஆல்டிரினுக்கு‍ ஒரு‍ சின்ன தயக்கம்.  எந்தக் காலை வைத்து‍ இறங்குவது, முதன் முதலில் இறங்குகிறோம், என்ன ஆகுமோ?  அப்படியே உள்ளே இழுத்து‍ விடுமா அல்லது‍ சுடு‍ மணலாக இருந்து‍ அப்படியே பஸ்பமாக்கி விடுமா என்றெல்லாம் ஒரு‍ கணம் தயங்கிகொண்டிருந்த வேளையில், இரண்டாவது‍ ஆணை நாசாவிலிருந்து‍ வருகிறது.  கோ பைலட் நெக்ஸ்ட் என்று.  ஆமாம் கோ பைலட்டாகத்தான் உடன் சென்றார் துணிச்சல்கார - முன்னாள் அமெரிக்க கப்பல் படை வீ்ரர் ஆம்ஸ்ட்ராங். 

தாமதிக்காமல் தன் காலை எடுத்து‍  நிலவில் பதித்தார் ஆம்ஸ்ட்ராங்.  நிலவு முதன் முதலில் அவரின் காலடி‍ தடத்தை தன் மேல் பதித்து‍ கொண்டது.  ஒரு‍ கண நேர தாமதத்தினால் நிகழ்ந்த இச்சம்பவம் ஆல்டிரினை பின்னுக்கு‍ தள்ளி, வரலாற்றில் ஆம்ஸ்ட்ராங்கை - முதன் முதல் என்ற தலைப்பின் கீழ் - தன்னுள் ஏற்றுக் கொள்வதற்கு‍ ஒரு‍ வாய்ப்பை வழங்கி விட்டது‍ ஒரு‍ சுவாரஸ்யமான விஷயம்தான்.

ஒரு‍ நிமிடத் தயக்கம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக மேற்படி‍ சம்பவத்தை, இந்த வாரம் வெளியாகியுள்ள நமது‍ நம்பிக்கை இதழில் அட்டகாசமான ஒரு‍ கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள்.  படித்து‍ பாருங்கள்.

நன்றி: நமது‍ நம்பிக்கை இதழ்  ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா.

பி.கு‍: எங்கேயோ படித்த ஞாபகம்.  மேற்படி‍ இருவரின் காலடி‍ தடமும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு‍ எந்தவித சேதாரமும் ஆகாமல் அப்படியே நிலவில் இருக்குமாம்.

Monday, March 28, 2011

அஞ்சறைப் பெட்டி‍

எங்கள் ஊர் சிவன் கோயிலில் சிவராத்திரி உற்சவம்.  ஒரு‍ வார கொண்டாட்டம். தினமும் மாலையில் பஜனை மற்றும் ஆன்மீக சொற்பொழிவு என திருவிழா களை கட்டும்.  இந்த வருடம்  சொற்பொழிவு வாசுகி மனோகரன்.  எதிர்பார்த்த கூட்டம் பந்தலில் இல்லை.  வருடப்பிறப்பு, பிரதோஷம் தவிர மற்ற நாட்களில் எங்கள் பகுதி மக்கள் யாரும் கோயிலில் உள்ள சாமிகளை தொந்தரவு செய்வதில்லை.  எனவே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு‍  அரை மணி நேரம் முன்பிருந்தே யாரோ ஒருவர் மைக்கில் பக்தர்களை வலுக்கட்டாயமாக பந்தலுக்கு‍ள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்.  அப்படியும் பந்தலுக்குள் சொற்ப அளவிலான கூட்டம்தான்.  பெரும்பாலும் சீனியர்ஸ்.

நிகழ்ச்சி துவங்கியது.  எளிமையான பந்தலலங்காரம்.  கம்பீரத்துடன் பேச்சை துவக்கியவர், சொற்ப அளவிலான கூட்டத்தை பார்த்து‍ துணுக்குறாமல்,   அட்டகாசமான ஒரு‍ பஞ்ச் கொடுத்தார் வாசுகி.  பொது‍க்கூட்டம் என்றால் எல்லோரும் வருவர்.  ஆனால் இங்கு‍ நடப்பதோ கலெக்டர்கள் மாநாடு.  எனவே வி.ஜ.பிக்களுக்கு‍ மட்டும்தான் இடம்.  அவர்களுக்குத்தான் இந்த இடத்தின் மதிப்பு புரியும், தெரியும்.  கூட்டம் கைதட்டி‍ ஆரவாரி்த்தது.

********************
ஆறாம் வகுப்பு படிக்கும் போது‍ மணியின் மௌன ராகத்தை முதன்முதலில் டெக் என்ற ஒரு‍ சமாச்சாரத்தில் என் பெரியப்பா வீட்டில் பார்த்தேன்.  கலர் டிவி, ரிமோட், டெலிபோன், டெக், பிரிட்ஜ் என அப்போதைய பல புதிய வரவுகளை அங்குதான் முதன்முதலில் நான் பார்ப்பது‍ வழக்கம்.  தலையணை சைஸ் வீடியோ கேசட்டையும் முதன்முதலில் பார்த்தது அங்கேதான்.  தஞ்சையிலிருந்த வீடியோ கேசட் வாடகைக்கு‍ விடும் கடையிலிருந்து‍ ஒரு‍ பையன், முப்பது‍ - நாற்பது‍ கேசட்டுகளை ஒரு‍ பையில் போட்டு,‍ சைக்கிளில் சுமார் பத்து‍ கிலோமீட்டர்  மிதித்து‍  வந்து‍ வேண்டியதை கொடுத்துவிட்டு‍ செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் மௌனராகம் கேசட் டெக் வாங்கும் போதே இலவசமாக கொடுத்தார்களா அல்லது‍ விலைக்கு‍ வாங்கியதா எனத் தெரியவில்லை.  கோடை விடுமுறை முழுவதும் அங்கிருந்த நாட்களில் பல தடவை அத்திரைப்படத்தை  பார்த்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு‍ப் பிறகு‍ அந்தப் படத்தை நேற்று‍ டிவியில் பார்த்தேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு‍ பார்க்கும் போதும் படம் சுவாரஸ்யம் குறையாமல் இக்காலத்திற்கு‍ ஏற்றவாறும் இருந்தது‍ வியப்பாக இருந்தது. (ஒரு‍ சில காட்சிகள் தவிர)

வி.கே.ஆர் மற்றும் மெக்கானிக் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகளின் போது‍ விழுந்து‍ விழுந்து‍ சிரித்த ஞாபகம்.  இப்போது‍ அந்த சீன்கள் புன்னகையைக் கூட வரவழைக்கவில்லை. 

ஒரு‍  எம்.டி.‍ தன்னுடைய ஊழியரை வி.கே.ஆரைப் போல நடத்துவாரா என்பது‍ மிகப்பெரிய கேள்வி. 

பாடல் காட்சிகளின் சுவாரஸ்யம் இன்னும் குறையவில்லை.  (பனி விழும் இரவு ....... பாடல் காட்சிக்கு‍ ஆடிய  அந்த தாடிக்காரர் யார்?  இப்போது‍ எங்கே இருக்கிறார்?)

இறுதியாக ஒரு‍ ஆசை.  இயக்குநர் இந்தப் படத்தை அதே மோகன் மற்றும் ரேவதியைக் கொண்டு‍ விட்ட இடத்திலிருந்து‍ பார்ட் டூ எடுக்க வேண்டும். 

Friday, March 25, 2011

கவிச் சக்கரவர்த்தி

அரசவையில் எப்போதும் எதிரும் புதிருமான நபர்கள் கம்பனும், ஒட்டக்கூத்தரும்.  அன்றும் வழக்கம் போல அவை கூடியது.  வழக்கமான அலுவல்களுக்கு‍ப் பிறகு‍  ஒரு‍ சுவாரஸ்யமான போட்டி‍  மேற்படி‍ இருவருக்கும் துவங்குகிறது. 

கம்பர் ஒரு‍ பாடலைப் பாடுகிறார்.  பாடலின் பொருள் நயத்தில் மூழ்கி அரசன் அகமகிழ்கிறான்.  ஒட்டக்கூத்தரோ எதிர்பார்த்தது‍ போலவே முகத்தை திருப்பிக் கொள்கிறார்.  அரசன் இதைப் புரிந்து‍ கொண்டு‍ கூத்தரை எதிர்கவி பாடும்படி‍ கேட்கிறான். கம்பர் பாடிய பாடலில் நாயகியை மெல்லிடையாள் என வர்ணித்திருக்க, கூத்தரோ தன் தலைவியை பிடியுடையாள் என வர்ணித்து‍ பாடல் புனைகிறார்.  ஒரு‍ கைப்பிடிக்குள் அவளின் இடை அடங்கி விடுமாம்.

இப்போது‍  கம்பனி்ன் முறை.  புன்னகைத்தவாறே பாடல் புனைகிறார்.  நாயகிக்கு‍ அவர் கொடுப்பது‍ கொடியிடை.  அதாவது‍ அவரை, பரங்கி போன்ற கொடி‍கள் எந்தளவிற்கு‍ தடிமனாக இருக்குமோ அந்தளவிற்கான இடையாம்.   ஒட்டக்கூத்தர் பக்கம் இப்போது‍ எல்லோரும் பார்க்க,  எடுத்த எடுப்பிலேயே நூலிடையாள் எனப் பாடலை ஆரம்பித்து‍ பந்தை பவுண்டரி்க்கு‍ விரட்டுகிறார்.

பிடி, கொடி, நூல் இதை விட மெல்லிய ஒன்றை உவமையாக சொல்ல முடியுமா?  பந்து‍ இப்போது‍ கம்பரின் களத்தில்.  அசராமல் தன் கவியை உரைக்க ஆரம்பி்க்கிறார் கவிச்சக்கரவர்த்தி.  எல்லோரும் ஆவலாக நாயகியி்ன் இடையையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். (!)

ஒரே போடாக போட்டார் கம்பர்.  ஆம் தன் நாயகிக்கு‍ இடு்ப்பு என்று‍ ஒன்று‍ இல்லலே இல்லையாம்.  அதாவது‍ இடை என ஒன்று‍ அவளுக்கு‍ இருக்கிறதா, இல்லையா என எதிரில் இருப்பவர் குழம்பி போகும் அளவுக்கு‍ மெல்லிய இடையாம்.

ஒட்டக்கூத்தர் இந்த பாடலுக்கு‍ அசந்து‍ போய் கை தட்டி‍ வாழ்த்தினாரா என்றெல்லாம் தெரியவில்லை. 



இலவச அறிவிப்புகள்

மாறி மாறி இரு‍ கழகங்களும் இலவச அறிவிப்புகளை வெளியிட்டதில் சாமானிய தமிழன் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் இருக்கிறான்.  நேற்று‍ வரை இலவசம் கூடாது‍ என சொல்லிக் கொண்டு‍ இருந்தவர்கள் தேர்தல் ஜுரத்தில் ஆடு, மாடுகளை எல்லாம் சேர்த்து‍ சொல்லி விட்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவு காரணமாக இருக்கலாம்.  ஆனால் யார் வந்தாலும் இரண்டு‍ ஆண்டுகளில் குறைந்தது‍ ஐம்பது‍ சதத்தையாவது‍ நிறைவேற்றி ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் இன்னும் இரண்டு‍ ஆண்டுகளில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபம் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம். 

அவர்களாவது‍ போன தடவை சொல்லிய மாதிரி சிலவற்றை கொடுத்து‍ விட்டார்கள்.  ஒருவேளை இப்போது‍ இவர்கள் வந்து‍ விட்டால், அவர்களைப் போலவே கொடுத்து‍ ஆக வேண்டிய கட்டாயம் வந்து‍ விடும்.  இல்லாவிட்டால் இவர்கள் சொன்ன இலவச அறிவிப்புகளே ஆப்புகளாக மாறவிடக் கூடிய அபாயம் அதிகம். 

இன்னொறு‍ விஷயம்  அவர்கள் வந்து, ஏதும் கொடுக்க முடியாவிட்டாலும் கூட பெயரில் முன் பாதி இருக்கிறது, ஆனால் என் செய்ய பின்பாதிதான் பற்றாக்குறை என்பது‍ போல ஏதாவது‍ பேசி, நிலைமையை ஒத்திப் போடலாம் அல்லது‍ இலவசங்களை தராமல் போன தடவை கொடுத்ததையே திருப்பி திருப்பி சொல்லி சமாளிக்கலாம்.  ஆனால் இவர்களுக்கு‍ எந்த வித சாய்ஸ்ம் இல்லை என்றே நினைக்கிறேன்.   ஆட்டம் கொஞ்சம் சூடாகத்தான் ஐந்து‍ ஆண்டுகளும் இருக்கும்.

இலவச அறிவிப்புகளை அறிவித்ததன்  மூலம் இருவருமே மக்களிடமிருந்து‍  சம   தொலைவில்தான்   இருக்கிறார்கள்.  2G தவிர்த்து‍ பார்த்தால் (?)   பிரச்சாரமே    மக்களிடம்     எடுபடும் என்று‍ நினைக்கிறேன்.   பிரச்சாரத்தின் வீச்சும், அடர்த்தியும் எந்த அளவிற்கு‍ பலம் பெறுகிறதோ அந்த அளவுக்கு‍ வோட்டு‍ வங்கியின் பலமும் கூடலாம்.  இந்த நேரத்தில்தான் புரட்சிப்புயல் போன்ற பேச்சாளர்களின் தேவை இவர்களுக்கு‍ தேவைப்படுகிறது.  ஆனால் என்ன செய்ய, அதீதமான தன்னம்பிக்கை (தன் மேல் +  மக்கள் மேல் + 2G) காரணமாக அவரை கழட்டிவிட்டது‍ எந்தளவிற்கு‍ பின்னடைவை தரும் என்பது‍ மே-ல் தெரிந்து‍ விடும்.

தொண்ணூறுகளின் மத்தியில் கட்அவுட் மற்றும் கூம்பு ஒலி பெருக்கிகளுக்கு‍ சேஷன் முட்டுக்கட்டையிட்டார்.   இப்போது‍ சுவரை அலங்கோலமாக்கும் சுவர் விளம்பரம், கொடி‍, தோரணம், பண விநியோகம், செலவு கணக்கு‍ என பலவற்றி்ற்கான கணகாணிப்பை பலப்படுத்தியிருக்கிறது‍ ஆணையம்.   இனி வரும் காலங்களில் -  அடுத்த எம்.பி தேர்தலிலேயே இந்த இலவச அறிவிப்புகளுக்கான தடையை ஆணையத்திடம் எதிர்பார்க்கலாம் என கருதுகிறேன்.

பி.கு‍: தேர்தல் தேதியை அறிவித்து‍, தேர்தல் பிரச்சாரத்தின் போது‍ இலவச அறிவிப்புகளை வெளியிட்டால்தானே சிக்கல்.  ஆறு‍ மாதத்திற்கு‍ முன்பே அறிவி்த்து‍ விட்டால் பிரச்சனை வராது‍ என்று‍ முன் கூட்டியே சொல்லி விடுவார்களோ.  வாழ்க ஜனநாயகம்

Thursday, March 24, 2011

வராஹி சுவாமிகள்

சைவம்தான் சிறந்தது.  அசைவம் என்பது‍ ஒரு‍ உயிரைக் கொன்று‍ புசிப்பதால் அது‍ மனிதகுலத்திற்கு‍ விரோதமானது.  ஒவ்வொரு‍ தாவரத்திற்கும் உயிர் உண்டு‍  என்பதை   அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி இரண்டுமே ஒப்புக் கொள்கின்றன.  அப்படியென்றால் கீரையை வேரோடு‍ பிடுங்கி சமைத்து‍ உண்கின்றோமே, அது‍ பாவம் இல்லையா?

எலுமிச்சம் பழத்தை கோயிலில்‍ கொடுப்பது‍  ஏன்?

எந்தவித நோயும் குழந்தைகளை அண்டாமல் இருக்க கொடுக்க வேண்டிய மருந்து‍ எது?

எங்கள் பகுதி காந்தி சர்வோதயசங்கத்தில் பணியாற்றும் திரு.கண்ணன் அவர்கள் ஒரு‍ நல்ல காரியத்தை சத்தமில்லாமல் செய்து‍ வருகிறார்.  தினமும் காலை ஆறு‍ மணி முதல் ஏழு‍ முப்பது‍ வரை கடை வாசலில் அருகம்புல் சாரு, வாழைத்தண்டு‍ சாறு‍ மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு‍ ஆகியவற்றை, அன்றன்றைக்கு‍ தயார் செய்து‍ விற்று‍ வருகிறார்.  ஆரம்பத்தில்‌ சற்று‍ டல்லடித்த வியாபாரம் விஷயம் தெரிந்தவர்களின் பேராதராவினால் இப்போது‍ வெகு‍ சுறுசுறுப்பாக  போய்க் கொண்டு‍ இருக்கிறது‍ என்பது‍ மகிழ்வான செய்தி.  குறிப்பாக காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்கு‍ செல்பவர்கள் மற்றும் நீரிழிவுக்காரர்கள் இந்த வாய்ப்பை நன்கு‍ பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையாகச் சொல்கிறேன், உங்கள் பகுதியில் யாராவது‍ இதுபோல விற்பனை செய்து‍ கொண்டிருந்தால் அருகம்புல் சாறை தவறாமல் வாங்கி அருந்துங்கள். காரணம் கடந்த சில மாதங்களாக என் தலைமுடி‍ சகட்டு‍ மேனிக்கு‍ கொட்டிக் கொண்டிருந்தது.  எங்கள் குல வழக்கப்படி‍ முப்பது‍ வயதைத் தாண்டும் போது‍ தலையில் பாதியிடம், காலி மனையாக இருக்க வேண்டும். இந்த வழக்கத்தை என் தந்தை மற்றும்  தம்பிகள் விதியை நொந்தபடி‍ ஏற்றுக் கொள்ள, எனக்கோ என் தாயின் உடல் வாகு சற்று‍ ஆறுதலைக்  கொடுத்தது.  அருகம்புல் போல தலைமுழுதும் முடிக்கற்றைகள்  பழைய பட ராம்கி போல அலைபாயும். 

திடீரென்று‍ சகட்டுமேனிக்கு‍ முடி‍ கொட்ட ஆரம்பிக்க நானும் மனதளவில் தயாராகி விட்ட சமயம்,  இந்த அருகம்புல் சாறு‍ எனக்கு‍ கை கொடுத்  ........... ஸாரி தலைமுடி‍ கொடுத்தது.  ஆமாம் கடந்த இரு‍ மாதங்களாக தினமும் ஒரு‍ டீகப் அளவில் இந்த சாறை குடித்த புண்ணியம் முடி‍ கொட்டுவது‍ கிட்டத்தட்ட நின்றே விட்டது‍. 

அருகம்புல் சாறுடன் சிறிதளவு மணத்தக்காளி கீரை மற்றும் வில்வ  இலையையும் சேர்த்து‍ பிழியப்பட்ட சாறு‍, இரத்தத்தில் உள்ள நச்சுகளை பிரித்து‍ எடு்க்கிறது‍; மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.  பெண்களுக்கு வரும் பலவித பிரச்சனைகளுக்கு‍ இது‍ ஒரு‍ அருமருந்து.  குறிப்பாக இதில் உள்ள செல்லுலோஸ் மற்றும்  குளோரோபில் பல மருத்துவ குணநலன்கள் உடையன.

நண்பர்களிடம் சென்ன போது‍ ஹி.............ஹி   ................ ஆடு‍ மாடுகளுக்கு‍  போட்டியா நாங்க வரல...... என்று‍ ஒதுங்கி கொண்டார்கள்.  அவற்றை சாப்பிடும்போது‍ வராத இரக்கம் இப்போது‍ மட்டும் எங்கிருந்து‍ வந்தது‍ என கேட்டேன்.

மேற்சொன்ன கண்ணன் அவர்களும், சேவாப்பூர் மாணிக்கம் என்ற யோகாப் பேராசிரியருமாக சேர்ந்து‍ அருகிலுள்ள ஒரு‍ பள்ளியில் சிறு‍ நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஞாயிறன்று‍ ஏற்பாடு‍ செய்து‍ அதை வாடிக்கையாளர்களிடம் கூறி எல்லோரையும் அவசியம் வருமாறு‍ அழைத்திருந்தாரக்ள்.   தலைப்பு: இயற்கை உணவு மற்றும் உடல்நலம்.  பேசுபவர் சுவாமி வராஹி சுவாமிகள்.  அனுமதி இலவசம்.

ஆனால் நம்மாட்கள் ஞாயிறன்று‍ பல உயிர்களுக்கு‍ கதி மோட்சம் கொடுக்க சென்று‍ விட்டதாலும், கிரிக்கெட் வேறு‍ இடையில் புகுந்ததாலும் நிகழ்ச்சி சொன்னபடியே சிறு‍ நிகழ்ச்சியாகவே அமைந்து‍ போனது.  ஆமாம் வந்தது‍ எண்ணி எட்டு‍ பேர்.  ஆனாலும் எந்த முகச் சுளிப்பையும் காட்டாது‍ சுவாமிகள் கலந்து‍ கொண்டு‍ பல இயற்கை உணவுகளைப் பற்றியும், மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டது‍  பயனுள்ளதாக இருந்தது.

அங்கு‍ அவர் கேட்ட கேள்விதான் மேலே உள்ள முதல் மூன்று பத்திகளும்.

1)  ஒரு‍ உயிரை கொன்றால், உதாரணமாக ஆட்டை கொன்றால் அதை உருவாக்கும் திறமை மனிதனுக்கு‍ இல்லை.  ஏதாவது‍ இரு‍ ஆடுகள் மனது‍ வைத்தால்தான் மூன்றாவது‍ ஒன்று‍ உருவாகும்  ஆனால் தாவரங்கள் அபப்டியல்ல.  உற்பத்தி செய்யும் வித்தை, முறை மனிதனுக்குத்‍ தெரியும்.  எனவே சைவம்‌ சிறந்தது.

2)  காலையில் தியானம் செய்வது‍ சிறந்தது.  படிப்பது‍ கூட மனதில் அப்படியே பதியும்.  இவையெல்லாம் ஏன்? எப்படி?  காற்றில் உள்ள ஓசோன் சக்தி பூமியில் காலை நேரத்தில் பரவியிருப்பதுதான் காரணம்.  இந்த சக்தி மனித உடலில் புகுந்து‍ பலவிதமான தூண்டுதல்களை செய்கிறது.  மனதை அமைதிபடுத்தி, நினைவாற்றலை தூண்டுகிறது. 

காலை நேரம் தவிர மற்ற நேரங்களில் இதை எப்படி‍ பெறுவது?  கோயில் கோபுர கலசங்கள் செம்பால் ஆனவை.  இதற்கு‍ ஒரு‍ சிறப்பம்சம் உண்டு.  ஓசோனை சேகரித்து‍ அப்படியே கோயில் கருவறையில் சுவாமி சிலை இருக்கும் இடத்திற்கு‍ அனுப்பி விடும். சரி அதை எப்படி‍ வெளியில் நின்று‍ கும்பிடும் நாம் பெறுவது?  அதை எப்படி‍ வீட்டுக்கு‍ எடுத்துச் செல்வது(?) இங்குதான் வருகிறார் திருவாளர் எலுமிச்சை.  ஆமாம் இந்தப் பழத்திற்கு‍ ஓசோனை பிடித்து‍ வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டாம்.  எனவேதான் கோயி்லில் இநத் பழத்தை நமக்கு‍ தருகிறார்களாம். 

தினமும் எலுமிச்சை சாறு‍ அருந்துவது‍ சாலச் சிறந்தது.  குறைந்தபட்சம் ஊறுகாயாவது.

3) குழந்தைகளுக்கு‍ கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், சுக்கு‍, மிளகு, திப்பிலி  (இன்னும் இரண்டு‍ நினைவுக்கு‍ வரவி்ல்லை)  சேர்த்து‍ இடித்...... ப்ச்....ப்ச் ..... ஏன் அவ்வளவு வேலை, நாட்டு‍ மருந்து‍ கடையில் விற்கும் திரிபலாசூர்ணம்  மற்றும் திரிகடுகுசூர்ணம் இரண்டையும் சமஅளவில் கலந்து‍ தேனில் குழைத்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் உடல் ஆரோக்கியம்   மேம்படும்.

சுவாமிகள் மலையடிவாரத்தில் ஒரு‍ ஆசிரமம் அமைத்து‍ அனாதை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் வாழ்வளித்து‍ வருகிறார். வராஹி விஜயம் என்ற புத்தகம் மாதாமாதம் அவரின் டிரஸ்டிலிருந்து‍    வெளிவருகிறது.   அவர் கூறிய ஒரு‍ சில விஷயங்கள் உங்களுக்காக.

நமக்கெல்லாம் சுடுகாடு‍ தென்திசையில்.  ஆடு, மாடு‍. மீன்களுக்கு‍ நம் வயிறே சுடுகாடு.

குக்கரிலிருந்து‍ வெந்த சோறை உடனே ஒரு‍ பாத்திரத்தில் சூடாக கொட்டி‍ வைத்து‍ விட்டால் கேஸ் தொந்தரவு நமக்கு‍ வராது.

ஞாயிறன்று‍ கண்டிப்பாக அசைவம் கூடாது‍ (!)

இரவில் தயிர் வேண்டாம்.

முள்ளங்கியை மிளகு, உப்பு தூவி, வடநாட்டவர் உண்பது‍ போல அப்படியே சாப்பிடலாம். வெள்ளரிக்காய் போல.

தயிர் + வாழைப்பழம், மோர் + வாழைப்பழம் கூட்டணி ஆகவே ஆகாது.

வட்டச்சூர்ணக்கீரை, துவரம் பருப்பு சம அளவு அரைத்து‍ தலையில் பற்று‍ போட்டால் எப்படிப்பட்ட தலைவலியும் குணமாகும்.

நேந்திரங்காயை வெட்டி‍ (பழம் அல்ல) வெயிலி்ல் காய வைத்து‍, பொடித்து‍, சலித்து‍ அதை தண்ணீர் அல்லது‍ பாலில் கலந்து‍ குழந்தைகளுக்கு‍ கொடுத்தால் எவ்வித டப்பா பவுடரும் தேவையில்லை.

வாழைப்பழத்தைப் பிழிந்து‍ சாறு‍ எடுக்க முடியுமா?  பிழிந்தால் ஸாரி பிசைந்தால் பஞ்சாமிர்தம்தான் கிடைக்கும்.  சாறு‍ எடுப்பது‍ எப்படி?   அருகம் புல்லின் பக்கவாட்டு‍ இலைகளை நீக்கி விட்டு, நடு‍ தண்டுப்பகுதியை துண்டுகளாக்கி பழத்துடன் சேர்‌த்து‍   வெயிலில் சிறிது‍ நேரம் வைத்தால் பழத்திலுள்ள நீர் பிரிந்து‍ வந்து‍ வி்டும். அச்சாறு‍ கண்புரை  நோய்க்கு‍ ஏற்ற மருந்து‍.

விரதமிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அமாவாசை, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் அகத்திகீரையை கண்டிப்பாக தொடக்கூடாது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பூமிக்கடியில் விளையும் எதையும் மூச்.............

நிகழ்ச்சியின் இறுதியில் அவலும், பேரிச்சையும் கொடுத்து‍ அழகாக முடித்து‍ வைத்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.   சின்ன செலவுதான்.  ஆனால் பலனோ அபரிமிதம்.  நன்றி திரு.கண்ணன் மற்றும் மாணிக்கம் ஐயா.

Thursday, March 17, 2011

மண்டையை பிய்த்துக் கொள்ள

இந்த லிங்கில் சென்று‍ மேஜிக்கை பார்த்து‍ எப்படி‍ எப்படியென்று‍ மண்டையைப் பிய்த்துக் கொள்ளவும்.
http://www.youtube.com/watch?v=Lsmdnr8a3Oc

வாஷிங்டன் vs மாயவரம்

நீராராடியாவின் டேப்புகளுக்குப் பிறகு‍ மத்திய மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க பிரதமரின் சுய விருப்பம் அல்லது‍ சுய உரிமை என நினைத்திருந்தவர்களுக்கு‍ பெருத்த ஏமாற்றம்தான் விளைந்தது.  கூட்டணி தர்மத்திற்காக பிரதமரின் விருப்பத்திற்கு‍ மாறாக ஒரு‍ சிலர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பது‍ சகஜமான ஒன்றாகி விட்ட காலமிது.  அதே போல கூட்டணி அமைச்சர்களை பதவியிலிருந்து‍ நீக்குவது‍ என்பதும் பிரதமரின் அதிகாரத்திற்கு‍ அப்பாற்பட்ட ஒன்றான விஷயமாகவும் மாறி, அவ்வாறு‍ நீக்க கூடாது‍ என்பதை ஒரு‍ மரபாகவே மாற்றியும் விட்டார்கள்.

ஆனால் சொந்தக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை சில நேரம் பிரதமர் வெளியேற்றும் போதோ அல்லது‍ இலாகா மாற்றத்தை ஏற்படுத்தும் போதோ பெரிய சலனம் இருப்பதில்லை. 

ஆனால் சில ஆண்டுகளுக்கு‍ முன் தன் கட்சியை சேர்ந்த ஒரு‍ மத்திய அமைச்சரின் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) இலாகாவை திடீரென்று‍ பிரதமர் பிடுங்கி வேறு‍ ஒருவருக்கு‍ கொடு்த்த போது‍ தமிழகத்தில் சிறு‍ சலசலப்பு ஏற்பட்டது.  கூட்டணிக் கட்சிகளே ஆச்சர்யத்துடன் புருவம் உயர்த்தின.  இதற்கும் அவர் தன் துறையில் வெகு‍ திறமையாக பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார்.  மிக முக்கியமான ஒரு‍ ப்ராஜக்ட் அவர் பணியாற்றிய காலம் வரையில் பிரபலமாக ஊடகத்தில் வலம் வந்து‍ கொண்டிருந்தது.  அவருக்குப் பிறகு‍ அந்த பிராஜக்‌ட் பற்றிய எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை.

பீடிகை போதும் என நினைக்கிறேன்.  சம்பந்தப்பட்ட அமைச்சர் மயிலாடுதுறை   உறுப்பினர்   மணிசங்கர் ஐயர்.     பரபரப்பான    அந்த ப்ராஜக்ட், ஈரானிலிருந்து‍ குழாய்   மூலம் பெட்ரோலியத்தை ஆப்கன் மற்றும் பாக். வழியாக இந்தியாவி்ற்கு‍ கொண்டு‍ வருவது.  ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.  

தரம்சிங் கர்நாடக முதலமைச்சராக இருந்த பொழுது‍ கர்நாடக சட்டசபையில் ஒரு‍ முறை, கர்நாடகத்திற்கு‍ வர இருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை ஐயர் தமிழ்நாட்டிற்கு‍ கொண்டு‍ செல்ல இருந்ததாகவும், பிரதமர் தலையிட்டு‍ கர்நாடகத்திற்கு‍  அந்த  நிலைய்தை கொண்டு‍ வந்ததாகவும் குறிப்பிட்டார்.  இந்த ஊடலில் (?) ஐயரின் பதவி காலி ஆயிற்று‍ எனவும் ஹேஸ்யம் கூறினார்.

அன்றைய செய்திதாள்களில் சின்ன பத்தி செய்தியாக ஒரு‍ மூலையில் இச்செய்தியை படித்த ஞாபகம். ஆனால் இப்போது‍ விக்கி லீக்ஸ் வெளியிட்ட    குறிப்புகளில்  அமெரிக்காவுக்கு‍ ஆதரவாக செயல்படக்கூடிய அமைச்சருக்கு‍ பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஐயரை தூக்கினார்கள் எனறு‍ செய்தி வெளியிட்டிருக்கிறது.

கண்ணுக்குத்‍ தெரியாத பல ஆக்டோபஸ் அதிகார கரங்கள் எப்படியெல்லாம் இந்திய ஜனநாயகத்தில் அலைந்து‍ கொண்டிருக்கின்றன என்பதற்கு‍ இந்த நிகழ்வை உதாரணமாக கொள்ளலாம்தானே.




தேர்தல் கணக்கு‍

மல்லிகை மாலைக்கு‍ 400 ரூபாய், வெடி‍ வெடித்தால் 100, பிரியாணிக்கு‍ ஆகும் செலவு என எல்லாவற்றையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப் போவதாக ஒரு‍ நீண்ட பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதை படித்திருப்பீர்கள். 

கூடவே இதையும் சேர்த்திருக்கலாம்.  கேட்ட தொகுதி தங்கள் கட்சிக்கு‍  கிடைக்காதது, எதிர்பாராத நபருக்கு‍ கட்சி மேலிடம் டிக்கெட் கொடுப்பது‍, போன்ற நிகழ்வுகளின் போது‍  கட்சித்  தொண்டர்கள் டென்ஷனாகி, உணர்ச்சி வயப்பட்டு‍ சம்பந்தப்பட்டவர்களின் உருவ பொம்மையை எரி்த்தால் அதற்கும் ஒரு‍ தொகையை நிர்ணயம் செய்து‍ அதை வேட்பாளர் கணக்கில் சேர்த்து‍ விடலாம்.

அநாகரிகமான இந்த செயலை தடுத்த புண்ணியம் கமிஷனுக்கு‍ கிடைத்தது‍ போலவும் இருக்கும்.  சுற்றுச்சூ‍‍ழலை காத்தது‍ போலவும் இருக்கும்.

Tuesday, March 15, 2011

அஞ்சறைப் பெட்டி‍

நண்பரின் வீட்டிற்கு‍ சென்றிருந்தேன்.  பையனை பாராட்டிக் கொண்டிருந்தார். பாராட்டுதலில்  ஒரு‍ அன்னியத்தன்மை தெரிய, என்ன விஷயம் என வினவினேன்.  பையன் இடைநிலைத் தேர்வில் இரண்டாவது‍ ரேங்க் என்றார்.  அப்படியா என்று‍ நானும் மகிழ்ச்சியுடன் பையனின் முதுகில் தட்டிகொடுத்துவிட்டு‍ அரையாண்டில் எவ்வளவு என்றேன்.  செகண்ட் ரேங்க் என்றான்.  காலாண்டில்?  செகண்ட்தான் இப்போது‍ அப்பா பேசினார்.

எனக்கு‍ சற்றே குழப்பம்.  ஆரம்பத்தில் இருந்தே இரண்டாவது‍ ரேங்க் என்றால் இந்த  கொஞ்சல், கொஞ்சம் ஓவராக தெரிய வாய்விட்டு‍  கேட்டே  விட்டேன்.   ஒன்றும் பேசாமல் ரேங்க் கார்டை நீட்டினார்.  வாங்கிப் பார்த்ததும் எனக்கு‍ சிரிப்பு வந்தது.  காலாண்டில் மொத்த மதிப்பெண்கள் 492.  2வது‍ ரேங்க்.  அடுத்த தேர்வில் 496 2வது‍ ரேங்க்.  பிறகு‍ 497 அப்போதும் செகண்ட்.  இப்போது‍ 498,  ஆமாம் செகண்ட் ரேங்க்.

யாருப்பா அந்த பொண்ணு? (லேடீஸ் ஃபர்ஸ்ட் அல்லவா) எனக் கேட்டேன்.  பெயரைச் சொன்னான்.  ஒரு‍ நடிகையின் பெயர்.

சரி பையன் எத்தனாவது‍ படிக்கிறான்? என்றா கேட்டீர்கள்.  ஹ...........ஹி.............ஒன்னாப்புதான்.

நோ......   நோ..... பல்ல நற நறன்ன கடிச்சா எனக்குப் பிடிக்காது.

****************

தேர்தல் அறிக்கை எதுவும் இன்னும் வரவி்ல்லை.  இப்பதிவில் வரும் விஷயத்தை ஏதாவது‍ ஒரு‍ கழகம் தன் தேர்தல் வாக்குறுதியாக அளித்தால்  என்னைப் போன்ற தமிழுணர்வாளர்களுக்கு‍ (?) அது‍ இன்பத் தேனாகவும் இருக்கும்; அக்கட்சிக்கு‍ ஒரு‍ ஓட்டு கிடைத்தது‍ போலவும் இருக்கும்.
சென்ற ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு‍ வரி விதிப்பு கிடையாது‍ என அறிவித்தார்கள்.  கிட்டத்தட்ட எல்லாப்  படங்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்   கொண்டன என்றுதான்  சொல்ல வேண்டும். ( சிவாஜி போன்ற படங்கள்‍ பெயர்ச் சொல்லை காரணம் காட்டி‍ வரி விலக்கு‍ பெற்றது‍ வேறு‍ கதை)

இதே போல முழு‍க்க முழுக்க தமிழில் பெயர்ப் பலகையைக் கொண்ட கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும்  வரியில்  ஏதாவது‍ ஒரு‍ சகாயம் செய்தால் தமிழினி பெயர்ப்பலகைகளிலும் மின்னும். 

சங்கப்பலகையிலிருந்து‍ பெயர்ப்பலகைக்கு‍ தமிழை கொண்டு‍ சென்ற தலைவரே/வியே  என வாழ்த்த தொண்டர்களுக்கு‍ ஒரு‍ வாய்ப்பு கொடுத்தது‍ போலவும் இருக்கும்.

நிற்க.  மற்ற மாநிலங்களில் மைல் கற்களில் தூரத்தை குறிக்கும் எண் அளவுகள் கூட அந்தந்த மொழிகளிலேயே இருப்பதை கவனித்திருப்பீர்கள்.  அதே போல நாமும் நமது‍ டூவீலரில், ரெஜிஸ்டர் எண் எழுதும் போது‍ முழுமையாக இல்லாவிட்டாலும் குறைநத் பட்சம்  TN என்பதற்கு‍ பதிலாக "தநா" என போடலாம் என எண்ணியிருந்தேன்.  ஆனால் கடைககாரரோ  அந்த மாதிரி போடக்கூடாது‍  சார்.  ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்காங்க என்று‍ சொல்லிவிட்டு‍  என் பதிலை எதிர்பாராமல் கண்ட்ரோல் P யை தட்டி‍ விட்டான்.

சரி இது‍ நிர்வாக வசதி என்று‍ வைத்துக் கொணடால்,  பெயர்ப்பலகையில்  தமிழுக்கு‍ என்ன கேடு் வந்தது.

இப்படி‍ பெயர் வைத்தால் தமிழ் வளர்ந்து‍, காய்த்து‍ தொங்குமா?  என்ற மொக்கை கேள்வியை யாரேனும் கேட்டால், ஸாரி, ஆடுகளத்தி்ல் பார்வையாளருக்கு‍ இடமில்லை என்பதே என் பதில்.

ஆங்கிலத்தை அப்படியே (டிம்பர் டிப்போ) தமிழில் எழுதுவது.  தொல்காப்பியர் ஜெராக்ஸ் என்று‍ எழுதுவது‍  அல்லது‍ எவர்பிரைட் அடுமனையகம் என தமிழுக்கு‍ போனால் போகட்டும் என்று‍  செகண்ட் ஹேண்‌ட் அரியாசனத்தை  போடுவது  எந்த வகையில் உத்தமம் என்று‍ யோசிக்க வேண்டும்.   குழந்தைகளுக்கு‍ பெயர் வைப்பது‍ போல நிறுவனங்களுக்கு‍ பெயர் வைப்பது‍ என்பது‍ ஒரு‍ குதூகலமான நிகழ்வு என்பது‍ என் கருத்து. 

ஒரு‍ சில நிறுவனங்கள் பெயர்ப் பலகையில் அடி‍ தூள் பரத்தி விட்டு‍, உள்ளே  சகட்டு‍ மேனிக்கு‍ ஆங்கிலம் சடுகுடு‍ விளையாட‍  அனுமதி  கொடுத்திருப்பாரக்ள்.   

Bus Stand என்பதற்கு‍ பேருந்து‍ நிலையம் எனவும், காவல் நிலையமாக Police Station பெயர் பெற்ற போது‍ம்  கிண்டல் பண்ணியவர்கள்  இன்று‍ கம்பிகும்பா தண்டனையை சொர்கத்திலேயே பெற்று‍க் கொண்டிருக்கிறரார்கள் என கேள்விப்பட்டேன்.

தமிழ்க்குடிமகன் புண்ணியத்தில் சில காலம் இவ்வேலைகள் ஜரூராக நடந்தன.  பிறகு‍ ஒரு‍ சுணக்கம்.  கவனிக்க வேண்டிய ஒரு‍ சில மென்மையான  பிரச்சனைகளில்   இதுவும் ஒன்று‍.

எனக்கு‍ பிடித்த ஒரு‍ கடையின் பெயர் :  பாதமலர் காலணியகம்.


கோவை நூறுஅடி‍ சாலையில் உள்ளது. பேருந்தில் சென்ற போது‍ பார்த்ததோடு‍   சரி.   எனக்கும்  கடைக்கும்  தொடர்பு  இல்லை. 

கிடக்கிறது‍ கிடக்கட்டு்ம், கிழவனை தூக்கி ...................................  என யாராவது‍ பின்னூட்டம் போட்டால், நீங்கதான் ஒரிஜினல் தமிழர் என ஒப்புக்  கொள்வேன்.




தேர்தல் கமிஷன்

கூட்டணி உண்டா இல்லையா? பிரிந்தால் ஸ்பெக்ட்ரம் என்னவாகும்?  அங்கே சென்று‍ விடுவார்களா?  ஏற்கனவே இருப்பவர்களுக்கு‍ பிரித்தது‍ போக இவர்களுக்கு‍ எவ்வளவு கொடுப்பார்கள்? கிடைப்பதை பெற்றுக் கொண்டு‍ இவர்களும் திருப்தியடைவார்களா?  நடிகர் கட்சிக்கு‍ எவ்வளவு?  அவரும் இங்கேயா?  அல்லது‍ அங்கேயா?  என்று‍ தமிழக மக்கள் ஒரு‍ பக்கம்,  மண்டையை உடைத்து‍ கொண்டிருக்க, மற்றொரு‍ புறம் புலனாய்வு பத்திரிகைகள் தன் பங்கிற்கு‍ வாரம் இரு‍ பட்டாசுகளை கொளுத்தி போட, இணையமும் தன் பங்கிற்கு‍ தனி ஆவர்தனத்தில் இறங்கி ஹேஸ்யம் கூற ஒரே பரபரப்பு எங்கும் பரயிவிருந்தாலும் மே மாதம் தேர்தல்; ஏப்ரலின் மத்தியில் அது‍ சூடு‍ பிடிக்கும் என அசமந்தமாக (அரசியல் கட்சிகள் உட்பட) எல்லோரும் இருந்த வேளையில், ஐந்து‍ மாநில தேர்தல் துவங்கும் முதல் நாளே தமிழகத்தி்ற்கு‍ ஒரே கட்ட தேர்தலை ஆணையம் அறிவித்து‍ நாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று‍ தன்னை நிரூபித்திருப்பது‍ கூட ஒரு‍ அதிரடி‍ அரசியல்தான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எல்லா கட்சியும் தேதியை மாற்றக்கோரி ஒற்றுமையுடன் (!) கோரிக்கை வைக்கும் என்று‍ முன் கூட்டியே தேர்தல் ஆணையம் நிச்சயம் யோசிக்கமாலிருந்திருக்காது. அட்டானமஸ் என்பதால் எடுத்த முடிவில் நிலையாக இருந்தது‍ கூட வியப்பில்லைதான்.

ஆனால் எல்லா கட்சிகளும் வெகுவிரைவில் கூட்டணியை தீர்மானிக்கவும், போட்டியிடுவதற்கான இடங்களை முடிவு செய்து‍ உடனே மனுதாக்கல் செய்வதற்கான காலத்தை குறுக்கி வைத்து‍ அவர்களை அதீதமான அரசியல் தந்திரங்கள் செய்ய விடாமல் தடுத்தது‍ சூப்பர்ப்.

மே முதல் வாரத்தில் தேர்தல் என்று‍ எல்லோரும் நினைத்த மாதிரி அறிவித்திருந்தால் பணப்பட்டுவாடாவுக்கு‍ முன் கூட்டியே அழகாக ரூட் போட்டு‍ கொடுத்தது‍ மாதிரி ஆகிவிடும்.  தேதியை அறிவித்த உடனேயே வருவாய் துறையினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி அதிகமான தொகை எடுத்துசெல்லும் வாகனங்களை சோதனைக்கு‍ உட்படுத்தி கிலியை ஏற்படுத்‌துவது‍ நமக்கு‍ ரொம்ப புதுசு.  (ஆமாம் இந்த வாகனச் சோதனை திருமங்கலத்தை தன்னகத்தே கொண்ட தமிழகத்திற்கு‍ மட்டும்தானா?  அல்லது‍ மற்ற நான்கு‍ மாநிலத்திற்கும் உண்டா?) 

இதுவரை 20கோடி ரூபாய் தொகை சரியான ஆவணங்கள் இல்லாமல்,  சிக்கியிருப்பதைப் படித்த எனது‍ நண்பர் சொன்னார். தேர்தலுக்கு‍ முந்தைய நாள் தேர்தலை ஒத்தி வைத்து‍ விட்டு‍, மாநில நிர்வாகத்தை தேர்தல் ஆணையமே சில மாதங்களுக்கு‍ மேற்கொண்டால் நன்றாக இருக்கும் போல் தெரிகிறதே. எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்க்கமாட்டமா?   என்று‍    சிம்புவை    வேறு‍      துணைக்கழைத்தார்

அரசியல்வாதிகளுடன் பழகிப்பழகி, ஏன் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுத்து‍ சான்றிதழ் கொடுத்து‍ சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம்‌ அனுப்பும் தேர்தல் ஆணையம், தானும் சரிக்கு‍ சரியாக அவர்களுடன் களத்தில் இறங்கி மல்லு கட்ட தயாராகிவிட்டது.  தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த தேர்தல் ஒரு‍ மைல்கல்தான்




Thursday, March 10, 2011

முதல் பதிப்பு

அச்சு‍ இயந்திரம் தமிழகத்துக்கு‍ வந்திறங்கிய நேரம்.  தமிழில் பைபிளை முதன்முதலி்ல் அச்சேற்றியாகிவிட்டது.   இப்போது‍ இலக்கியம் பக்கம் தன் கவனத்தை திருப்பிய ஆங்கிலேய அரசாங்கம், முதன்முதலில் எந்த நூலை அச்சேற்றலாம் என தன் ஊழியர்களை கேட்க, சிவக்கொழுந்து‍ தேசிகரை நோக்கி எல்‌லோரும் கைநீட்ட அவரை வரவழைத்தார் துரை.

கும்பகோணம் அருகேயுள்ள ஒரு‍ குக்கிராமம் கொட்டையூர்.  ஆதீனத்தில் புலவராக இருந்தவர் சிவக்கொழுந்து‍ தேசிகர்.  வெள்ளைக்கார துரையிடம் சென்ற தேசிகர், சற்றும் தாமதியாமல், துரை கேட்ட கேள்விக்கு‍ "திருக்குறள்" என பதிலளித்தார். 

"திருக்குறளில் அப்படி‍ என்ன இருக்கிறது"‍ - இது‍ துரை
"என்ன இல்லை"- இது‍ தேசிகர்
"எல்லாம் இருக்கிறதா?‍"
"அனைத்தும் இருக்கிறது?"
சுற்றும் முற்றும் பார்த்த வெள்ளையன், "அதோ அந்த கல்லைப் பற்றி இருக்கிறதா." என கேட்க, 
"கல்லைப் பற்றி இருமுறை வருகிறது‍" என பதிலளித்தவர் உடனே, 
"பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்"  என்ற குறளை கூறி துரையை அசத்தினாராம்.
குறள் புத்தக வடி‍வில் அமோகமாக அச்சேறியதாம்.
இப்படி‍ ஒரு‍ சம்பவத்தை எங்கேயோ படித்த நினைவு.  அதை என் முதல் பதிப்பாகவும் வெளியிட உதவிய தேசிகருக்கு‍ நன்றி.
தேசிகரைப் பற்றிய மற்ற விஷயங்களை யாரேனும் தெரியப்படுத்தினால் அவருக்கு‍ தன்யனாவேன்.

ஹலோ...... என்னது‍ ............... புரியல  ........ஆங்  ..... அந்த இன்னொரு‍ குறளா,
அஸ்கு, புஸ்கு‍ நீங்களே வள்ளுவர்கிட்ட கேட்டு‍ தெரிஞ்சுக்குங்க.