Saturday, May 7, 2011

தனியார் கோயில்கள்

அது‍ ஒரு‍ வழிபாட்டு‍ தலம்.  வேற்று‍ இனத்தை சேர்ந்த ஒருவன் வழிபட அங்கு‍ வருகிறான்.  கடவுளுக்கு‍ நெருக்கமான (!) ஒரு‍ சிலர் அவனை உள்ளே விட மறுக்கிறார்கள். ஏன் எனக் கேட்ட போது‍ அவனுடைய நிறம், குடிப்பிறப்பு ஆகியன காரணங்களாக காட்டப்படுகின்றன.  பலநாள் முயற்சித்தும் அந்த நவீன நந்தனாருக்கு‍ அனுமதி கிட்டவில்லை.  இறுதியாக ஒருநாள் மிகுந்த மகிழ்வுடன் அத்தலத்தின் வாசலுக்கு‍ வருகிறான்.  அங்கு‍ காவல் காக்கும் ஒருவன் கோபமும், சலிப்புமாக அவனை திட்ட எத்தனிக்கும் போது இவன் கூறுகிறான், "நேற்று‍ என் கனவில் கடவுள் வந்து,  இனிமேல் அங்கே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.  ஏன் என வினவியதற்கு‍ அவர்கள் என்னையே அங்கிருந்து‍ விரட்டிவிட்டார்கள்.  நான் இல்லாத இடத்தில் உனக்கு‍ என்ன வேலை"  இந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இது‍ போன்ற அனுபவத்தை நானும் சமீபத்தில் பெற்றேன்.

மற்ற ஊர்களில் எப்படியோ தெரியவில்லை.  கோவையைப் பொறுத்தமட்டில், இங்குள்ள மில் மற்றும் தொழிற்சாலைகளில் டாய்லட் மற்றும் பணியாளர்களுக்கான ரெஸ்ட் ரூம் வசதி இரு‍க்கிறதோ இல்லையோ அட்டகாசமான ஒரு‍ கோயிலை வாஸ்து‍ பார்த்து‍ கட்டி‍ விடுவார்கள். பெரும்பாலும் பிள்ளையார் கோயில்தான்.   அவரும் நடக்கிற அக்கிரமங்களை பார்த்தபடி‍ தேமே என்று‍ உட்கார்ந்திருக்க வேண்டும்.  அதற்கு‍ தினப்படி‍ பூஜை செய்வதற்கு‍ ஒரு‍ அர்ச்சகர் வேறு‍ வருவார்.  இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான கார்பரேட் அர்ச்சகர்கள் பைக்கில்தான் வந்து‍ இறங்குகிறார்கள். மாத இறுதியில் அர்ச்சகர் தன் சம்பளத்திற்காக ஒப்பந்த பணியாளர்களோடு‍  பெஞ்சில், பர்ஸனல் ஆபிஸ் வாசலில் மணியை பார்த்தபடி‍ அமர்ந்திருப்பது‍ சுவாரஸ்யமான கொசுறு‍ செய்தி.  

சரி விஷயத்திற்கு‍ வருகிறேன்.  இது‍ போன்ற கோயில்களுக்கு‍ ஒரு‍ சில விசேஷ நாட்களை தவிர மற்ற நாட்களில்  பொதுமக்களை உள்ளே அனுமதிப்பதில்லை.  உள்ளே செல்வதற்கு‍  பொதுவாக யாரும்  அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதே கவனிக்க வேண்டி‍ய செய்தி.

ஆனால் ஒரு‍ சில தனியார் நிறுவனங்கள் தங்கள் இடத்தில் அட்டகாசமான ஒரு‍ கோயிலை கட்டியிருப்பார்கள்.  குறிப்பிட்ட அந்த இடம் தொழிற்சாலையாகவோ அல்லது‍ ஏதேனும் ஒதுக்குப்புறமான தோட்டமாகவோ அல்லது‍ மலை பாங்கான பகுதியாகவோ கூட இருக்கலாம்.  அந்த கோயிலுக்கு‍ ஏதேனும் ஒரு‍ விதத்தில் யாரோ ஒரு‍ புண்ணியவான் விளம்பரத்தை தேடிக்‍ கொடுத்துவிட, மின்னல் வேகத்தில் மௌத் அட்வர்டைசிங்கோ ஏதோ சொல்வார்களே, அது‍ போல மக்களிடம் பரவி ஒரு‍ மினி சுற்றுலா தலமாக அந்த கோயி்லை ஆக்கிவிடுவார்கள்.  

அது‍ போல ஒரு‍ கோயிலுக்குத்தான் அண்மையில் செல்லும் வாய்ப்பு வந்தது.  ஆனால் அங்கு‍ போய் சேரும் வரை அது‍ தனியாருக்கு‍ சொந்தமான கோயில் என்று‍ எனக்கு‍ தெரியவி்ல்லை.  அரை கி.மீட்டருக்கு‍ முன்னதாகவே எல்லா வண்டியையும் நிறுத்தி விட்டு‍ நடக்க விட்டார்கள்.   சரி குறுகலான சாலையாக இருப்பதால் இதை பெரிது‍ படுத்த தேவையில்லை என  நினைத்தவாறு‍ நடக்க ஆரம்பித்தோம்.  ஆனால் அந்த காவலர் சொன்ன விதம் இருக்கிறதே,  அப்போதே எனக்கு‍ மைல்டாக ஒரு‍ டவுட் ப்ளஸ் சுவாரஸ்யம்.  இங்கு‍ ஏதோ ஒன்று‍ வித்தியாசமாக நடக்கப் போகிறது‍ என்று. செக்யூரிட்டி‍ மற்றும் வாட்ச்மேன்களின் பேச்சு‍ மற்றும் பாடி‍ லர்ங்வேஜ்களிலேயே ஒரு‍ நிறுவனத்தின் இலட்சணத்தை ஓரளவுக்கு‍ அனுமானிக்க முடியும் என கேள்வி பட்டிருக்கிறேன். 

கோயிலுக்கு‍ சென்றால் வெளி வாசலில் நான்கைந்து‍ தனியார் நிறுவன காவலர்கள் நின்று‍ கொண்டு‍, கோயிலுக்கு‍ வருபவர்களிடம்  கையை ஆட்டி‍ ஆட்டி‍ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  விஷயம் இதுதான். குழந்தைகள் சத்தம் போடக் கூடாது‍ ஸாரி கூடாதாம்.  பெண்களின் வளையல், கொலுசு‍ சத்தம் கூட கேட்கக் கூடாதாம்.  உரக்க பேசக் கூடாதாம்.  இது‍ போல பல தாம்கள்.  தவிரவும் ஒருசில அன்புகட்டளைகளை வேறு‍ பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

அதன் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான். இது‍ தனியாருக்கு‍ சொந்தமானது‍.  கட்டியவர் இவர்.  கோயில் இருக்கும் நிலம் இன்னாருடையது.  பொதுமக்களி்டமிருந்து‍ தம்பிடி‍ காசை கூட வாங்காமல் கட்டியிருப்பதால் எந்த நேரத்திலும்  காரணமே கூறாமல் கோயிலுக்குள் இருப்பவர்களை வெளியேற்ற நிர்வாகத்திற்கு‍ முழு உரிமை உண்டு‍.  யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும், வேண்டாம் என்பதில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

இதைப் படித்தால் எந்த வலைப்பூ வைத்திருப்பவனாவது‍ உள்ளே செல்வானா?  இந்த சுயமரியாதை என்ற வார்த்தைக்கு‍ என்ன அர்த்தமோ எனக்கு‍ தெரியாது.  ஆனால் உள்ளே செல்ல மனமில்லாமல் வெளியே அமர்ந்து‍ விட்டேன்.

நீ ஒரு‍ பெரிய ,,,,,,,,,,,,,,,,, ?

கோடிட்ட இடத்தை எந்த வார்த்தையாலாவது‍ நிரப்பிக் கொள்ளுங்கள்.  எனக்கு‍ கவலையில்லை.  ஆனால் என்னுடைய கேள்வி இதுதான்.  உள்ளே இருக்கும் கடவுள் பகட்டான கோயிலைப் பார்த்தோ, வங்கி இருப்பு மற்றும் ஆடம்பரத்தை பார்த்தோ அருள் பாலிப்பதில்லை.  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சொல்வார்களே, அது‍ போல அவனருள் பெறவும் அவனுடைய கருணை வேண்டும்.  இராணுவ கண்டிப்பை காட்டுவதற்கு‍ கோயில் தகுந்த இடமி்ல்லை. 

ஆயிரம் சொன்னாலும் அது‍ ஒரு‍ தனியார் கோயில்.  அவர்கள் சொல்வதை கேட்டுதானே ஆக வேண்டும்.  இல்லையென்றால் எதற்காக அங்கு‍ நீ செல்ல வேண்டு‍ம் என நீங்கள் கேட்கலாம். 

கோயிலை பொதுமக்களுக்கு‍ என திறந்து‍ விடும் போதே, ஒரு‍ சில நீக்கு‍ போக்குளையும் செய்ய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.  இல்லாவிடடர்ல் யாருக்கும் அனுமதி இல்லை என்றே கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடலாமே. 

இரண்டாவது‍, தராதரம் இல்லாமல் எல்லோரையும் சிறைக் கைதிகளைப் போல விரட்டும் ஊழியர்கள். (அர்ச்சகர்கள் உட்பட)  இவர்கள் முதலாளி சொல்வதை தலையால் செய்து‍ முடிக்கும் அசகாய சூரர்கள்.  என்ன நமக்குத்தான் எரிச்சல் தலை தூக்குகிறது. 

ஆக தெரியாத ஊரில் உள்ள கோயிலுக்கு‍ செல்லும் போது‍ விசாரித்துவிட்டு‍ செல்லவும். (குறிப்பாக வால்பாறைக்கு)

2 comments:

  1. இதுக்கேல்லாம் டென்ஷன் ஆனா எப்படி?

    ReplyDelete
  2. ////ஆக தெரியாத ஊரில் உள்ள கோயிலுக்கு‍ செல்லும் போது‍ விசாரித்துவிட்டு‍ செல்லவும். /////


    ....... இந்த அறிவுரை புதுசா இருக்குது... :-)))))))

    ReplyDelete