Thursday, May 26, 2011

ஹவுஸ் ஃபுல்

என்னை நேரிடையாக பாதிக்கின்ற விஷயம் என்பதால் கொஞ்சம் சீரியஸாக முயன்றிருக்கிறேன்.  வழக்கம் போல என் மழலை எழுத்துகள் கொஞ்சம் உங்களை இம்சி்த்தாலும் என் உளக்கிடக்கையை (?) தாங்கள் புரிந்து‍ கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சென்ற அதிமுக ஆட்சியில் லாட்டரி ஒழிப்பு என்பது‍ காலாகாலத்திற்கும் அவர்களுக்கு‍ ஒரு‍ பெயரை ஏற்படுத்தியது‍ போல, திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிற்றுந்து‍ திட்டமு‍ம், உழவர் சந்தையும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த முறை சமச்சீர்கல்வி திமுகவிற்கு‍ ஒரு‍ நல்ல பெயரை பெற்று‍ தநத்து‍ என்னவோ நிஜம்.  இவர்களுக்கு‍ பதவி பறி போக 2G, குடும்ப ஆதிக்கம், விலைவாசி என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சமச்சீர்கல்விதிட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது‍ என்பதை மறுக்க முடியாது.

2010-11ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு‍ சமச்சீர்கல்விதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்ற முதல் தலைமுறை மாணவர்கள் மிகச்சரியாக ஆறாம் வகுப்புக்கு‍ வரவும், இந்த திட்டம் அதே வருடத்தில் நடைமுறைக்கு‍ வரவும் மிகச் சரியாக அமைந்தது.

அரசு‍ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு‍ சிலரிடம் பேசிய போது‍ அவர்கள் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது.  எங்கள் மாணாக்கர்கள் செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்று‍ வருவதால் இன்னும் ஐந்து‍ வருடங்கள் கழித்து‍ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு ரிசல்டை பாருங்கள், அசந்து‍ விடுவீர்கள்.   3 மற்றும் 4 வகுப்பு மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு‍ பதில் சொல்ல நாங்கள் திணற வேண்டியுள்ளது.  

இனி அடுத்து‍ சமச்சீர்கல்வியும் பயிலும்போது‍ எந்த மெட்ரிக் மாணவனுக்கும் சளைக்காமல் எங்கள் பையன்களும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள்.

என் நண்பர் ஒருவரின் மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.  அவன் கிராமத்தில் செ.வ.க மூலம் 1 லிருந்து‍ 5 வரை படித்தவன்.  பிறகு‍ இங்கு‍ வந்து‍ சமச்சீர்கல்வியில் ஆறாம் வகுப்பு முடித்து‍ ஏழாவதிற்கு‍ தயாராகி விட்டான்.

வாராவாரம் இண்டெர்நெட் மையத்திற்கு‍ தன் தகப்பனாரை அழைத்து‍ செல்வான்.  கேட்டால் பிராக்டிகல் என்று‍ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி  பயமுறுத்துவான். 

அடியேன் படிக்கிற போது‍ பிளஸ் டூ வரை பிராக்டிகல் என்பதிற்கு‍ என்ன அர்த்தம் என்பதே எனக்கு‍ தெரியாது‍ என்பதை இங்கே கூச்சத்துடன் பதிவு செய்கிறேன். 

தண்ணீருக்கு‍ள் காய்களை (vegetables) போட்டால் எந்தெந்த காய்கறிகள் மூழ்கும்,  எவையெவை மிதக்கும்.

நாட்டுப்புரப்பாட்டு‍ நெட்டிலிருந்து‍ பிரிண்ட் அவுட் எடுக்கனும்.  எப்படி‍ எடு்க்கிறது?  (புரமா, புறமா இடையில் ஒரு‍ சர்ச்சை வந்தது‍ நினைவிருக்கலாம்)

பள்ளிக்கூடத்திலிருந்து‍ நம்ம வீடு‍ எத்தனை தப்படி‍ இருக்கும்.

வீட்டில் உள்ள அறைகளோட நீள அகலம் என்ன?  எத்தனை அடி?

எந்த பொருள் வாங்கினாலும் manufacturing date மற்றும் expiry date ஏன் பார்க்கனும்?

சிறுவர்களை சகட்டு‍ மேனிக்கு‍ கேள்வி கேட்க தூண்டுவதுதான் சமச்சீர்கல்வி.    ஆறாம் வகுப்பு பாடப்புத்தகம் கிடைத்தால் படித்து‍ பாருங்கள்.  அட்டகாசமான எழுத்து‍ நடையில் விறுவிறுப்பான ஒரு‍ நாவலைப் படிப்பது‍ போல இருக்கும். 

மனசாட்சியுள்ள எந்தவொரு‍ அரசுப்பள்ளி ஆசிரியரையும் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரிய வரும்.  வேலைப்பளு‍ அவர்களுக்கு‍ கூடியுள்ளது‍ என்னவோ உண்மைதான்,  ஆனால் அதனால் விளையும் நன்மை அளப்பரியது.

பங்களாவில் இருப்பவனும், குப்பத்தில் இருப்பவனும் ஒரே சப்ஜெக்டை படிப்பதா? கெளரவம் என்னாவது?   போட்டி‍ அதிகரிக்க, அதிகரிக்க மேட்டுக்குடி‍ மக்களுக்கு‍ கொஞ்சம் தலைவலிதான்.  எனவே கச்சிதமாக காயை நகர்த்தி முளையிலேயே நடுத்தர மற்றும் குப்பத்து‍ மூளையை மழுங்கடிக்க முயன்று‍ வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

ஆறாம் வகுப்பு மாணவனுக்கு‍ நான்காம் வகுப்பு பாடம் எதற்கு‍ என்று‍ மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கேட்கிறார்கள்.  சரி! ஏழாம் வகுப்பு மாணவனுக்கு‍ கரப்பானின் இரத்த ஓட்ட மண்டலம் எதற்கு?  கேட்க தெரியாமல் முழிப்பது‍‍ ஏழாம் வகுப்பு மெட்ரிக் மாணவனேதான்.

தரம் இல்லையெனில் தரத்தை மேம்படுத்தட்டும்.  சர்ச்சைக்குரிய பாடங்களை நடத்த வேண்டாம் என அறிவிப்பு செய்யட்டும்.  ஒட்டு‍ மொத்த வீட்டையே கொளுத்துவது‍ என்ன நியாயம்?

சமச்சீர்கல்வியை படித்தா அப்துல் கலாம் ராக்கெட் விட்டார்.  இது‍ ஒரு‍ மெட்ரிக் பிரகஸ்பதியின் கேள்வி.  பி.எட்டை ஒழுங்காக படித்திருந்தால் இந்த மாதிரியான அச்சுப்பிச்சான கேள்விகளை அவரால் கேட்க முடியாது.

ஆம் குழந்தைகளில் பல ரகம் உண்டு.  மீத்திறன் பெற்ற குழந்தை (gifted child), சராசரி குழந்தை, கற்றல் குறைபாடு‍ கொண்டது,  மெதுவாக கற்கும் குழந்தை என பலப்பல.  கவனிக்கவும்: மக்கு‍ குழந்தை என்று‍ இதுவரை ஒரு‍ குழந்தை கூட இந்த பூவுலகில் பிறக்கவில்லை.

இதில் நமது‍ முன்னாள் குடியரசுத் தலைவர் மீத்திறன் பெற்ற குழந்தை என்ற கேட்டகரியில் வருவது‍ உங்களுக்கு‍ இப்போது‍ புரியும்.    ஆனால் சமச்சீர்கல்வி என்பது‍ இராமேஸ்வரம் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா  மாவட்டங்களிலும், எல்லா தெருக்களிலும் ஒரு‍ அப்துல் கலாம் வர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே.

இருக்கின்ற கவிஞர்கள் இம்சைகள் போதும்
என்னை கவிஞன் ஆக்காதே

வைரமுத்து‍வின் ஒரு‍ திரைப்படபபர்டல் வரியிது.  

இருக்கின்ற புத்திசாலிகளின் இம்சைகள் போதும்
இன்னும் புத்திசாலிகள் வேண்டாம் -  என்று‍ ஹவுஸ் ஃபுல் பலகையை ஒவ்வொரு‍ பள்ளியிலும் மாட்டி‍ வைக்க முடிவெடுத்திருப்பது‍ மெக்கல்லாவை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.  இளைய தலைமுறையை............?

2G என ஒன்று‍ இல்லாமல் இருந்து‍, இவர்கள் வருந்தி வருந்தி  என்னதான் களப்பணி ஆற்றியிருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பார்களா என்பது‍ இங்கு‍ கவனிக்க வேண்டிய கேள்வி.  பெருவாரியான வெற்றியை வலுக்கட்டாயமாக மக்கள் இவர்கள் மீது‍ சுமத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.  

அதைப்புரிந்து‍ கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று‍ முடிவெடுப்பது‍ம் அதுவும் எண்ணிக்கையில் ஆயிரத்துக்குள் அடங்கிப் போகும் மெட்ரிக் மாபியாக்களுக்கு‍ ஆதரவு தருவதும் ப்ச் என்னவோ போங்க.

அவிய்ங்களும், (சென்ற ஆட்சியாளர்கள்)  இவிய்ங்களும் ஏதோ ஒரு‍ புள்ளியில் இணைந்து‍ விடுவதாகத்தான் எனக்கு‍ப் படுகிறது‍.  உங்களுக்கு.....?

No comments:

Post a Comment