Monday, May 16, 2011

அஞ்சறைப் பெட்டி‍

சென்ற வருடம் IAS தேர்வு முடிவுகளில் முதலாவதாக வந்து‍ கலக்கியவர் ஒரு‍ கஷ்மீர் இளைஞர்.  இப்போது‍ தமிழகத்தை சேர்ந்த ஒரு‍ இளைஞி முதல் மார்க் எடுத்து‍ தமிழகத்திற்கு‍ பெருமை சேர்த்திருக்கிறார்.  முதல் பத்து‍ இடங்களுக்கு‍ள் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு‍ பேர் தேறியிரு‍ப்பதும், மொத்த தேர்ச்‌சியில் கிட்டத்தட்ட 15% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் நமக்கெலாம் ஒருவகையில் பெருமைதான். 

இன்னும் பதினைந்து‍, இருபது‍ வருடங்களுக்குப் பிறகு‍ இந்தியாவின் மிக உயரிய பதவிகளிலெலாம் நம்மாட்களின் கொடிதான் பறக்கும்.  இன்று‍ கேரள சேட்டன்களின் ஆதிக்கம் எப்படி‍ டில்லியில் பறக்கிறதோ அதே போன்று‍ ஒரு‍ நிலை வருங்காலத்தில் வரும் என்பது‍ சர்வ நிச்சயம்.  வருடா வருடம் நம் மாநிலத்திலிருந்து‍ தேர்வு பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகிக் கொண்டு‍ செல்வதே இதற்கு‍ சாட்சி.

ஆனால் அப்போது‍  அரசியலில் இருக்கப் போகும் நம் அரசியல் தலைவர்கள் இந்த IAS-களை பயன்படுத்தி என்னென்ன நலத்திட்டங்களை வெகு‍ சுளுவாக தமிழகத்திற்கு‍ கொண்டு‍ வரப்போகிறார்கள்  என்பது‍ நம் தலையெழுத்தை வைத்தே உள்ளது.

***********************

மாம்பழத்தின் ஜாதகக் கோளாறு‍ இப்போது‍ சாத்துக்குடியையும் பிடித்து‍ கொண்டு‍ விட்டது.  படிகாரக்கல்லைக் கொண்டு‍ பழுக்க வைப்பதால் மனிதனுக்கு‍ ஏற்படும் கோளாறு‍ கொஞ்ச நஞ்சமல்ல.   அதை தெரிந்து‍ கொண்டும் திருந்தாத ஜென்மங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக இப்போது‍ சாத்துக்குடிப் பக்கமும் தங்கள் வேலையை துவக்கியிருப்பது‍ திமிர்த்தனத்தின் உச்சம். 

கோவையில் சென்ற வாரம் 4 டன் அளவிலான சாத்துக்குடிகள் பழ மண்டிகளில் இருந்து‍ கைப்பற்றப்பட்டு‍ மாவட்ட சுகாதார ஆய்வாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.  காரணம் படிகாரம் கொண்டு‍ அவற்றை பழுக்க வைத்தது‍தான்.

அதிரடி‍ நடவடிக்கைக்கு‍ தேர்தல் ஆணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  எந்த மேலிட தலையீடும் இல்லாமல் நடந்த இந்த அதிரடி‍ நடவடிக்கை புதிய ஆட்சியிலும் தொடர வேண்டும்.

*******************

நண்பரின் வீட்டிற்கு‍ நல்ல வெயில் நேரத்தில் சென்றிருந்தேன்.  என்னைப் பார்த்ததும் வரவேற்றவர் சமையலறையை நோக்கி "இன்னொரு‍ டம்ளர் கொண்டு‍ வா" என குரல் கொடுத்தார்.

"டீ, காபியெல்லாம் வேண்டாம்.  வெயில்ல ஒண்ணும் சமாளிக்க முடியாது."
என சமாளித்தேன்.  சூடாக ஏதேனும் குடித்து‍ தொலைத்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு‍ பொங்கி வழியும் (குறிப்பாக கழுத்துப் பகுதி) இந்த வியர்வை சனியனுக்கு‍ பயந்து‍ பல விஷயங்களை ஒதுக்க வேண்டியுளள்து. 

அவரின் மனைவி சிறிது‍ நேரத்தில் ஒரு‍ கண்ணாடி‍ தம்ளரில் கரு‍ஞ்சிவப்பில் ஏதோ ஒரு‍ திரவத்தைக் கொண்டு‍ வந்தார்.  கூல்டிரிங்கா !   அடக் கடவுளே இதுவும் நமக்கு‍ ஒத்துக் கொள்ளாத  விஷயமாயிற்றே என்றெண்ணியவாறே வாங்கினேன்.

ஆனால் ஒரு‍ வாய் வைத்ததும் வியப்படைந்தேன். அது‍ குளிர்பானம் அல்ல.  குளிர்ந்த சாறு. ஆனால் தெரிந்த ஏதோ ஒன்றிலிருந்துதான் இந்த சாறை தயாரித்திருந்தார்கள் என்பது‍ புரிந்தது.  முடிந்த மட்டும் என் சமையல் அறிவைக் கொண்டு‍ (!) யோசி்த்தும் ஒன்றும் புலப்படாது‍ போகவே  என்னவென விசாரித்தேன்.  பீட்ரூட் + வெள்ளை பூசணி கலந்த சாறாம். இரண்டையும் மிக்ஸியில் அடித்து‍ சாறு‍ பிழிந்து, வெல்லம் மற்றும் ஏலக்காயை தட்டி‍ போட்டு‍ வடிகட்டி‍ சிறிது‍ நேரம் பிரிட்ஜில் வைத்து‍ கொடுத்திருக்கிறார்கள். ருசி......... அடடா  செய்து‍ பார்த்து விட்டு‍ சொல்லுங்கள் அல்லது‍ அனுபவியுங்கள்.  சத்துக்கு‍ சத்து, பானத்திற்கு‍ பானம்.

***************

1 comment:

  1. பீட்ரூட் + வெள்ளை பூசணி கலந்த சாறாம். இரண்டையும் மிக்ஸியில் அடித்து‍ சாறு‍ பிழிந்து, வெல்லம் மற்றும் ஏலக்காயை தட்டி‍ போட்டு‍ வடிகட்டி‍ சிறிது‍ நேரம் பிரிட்ஜில் வைத்து‍ கொடுத்திருக்கிறார்கள். ருசி......... அடடா


    ......நீங்கள் சொல்லும்போதே ..... அசத்துது. yummy!

    ReplyDelete