Wednesday, May 11, 2011

காந்தி வந்த ஊர்

விருதுநகருக்கு‍ ஒரு‍ வேலையாக சென்றிருந்த என் நண்பர் ஒருவர் "பார்த்தேன், பார்த்தேன்" என்றபடி‍ வந்தார்.  கண்டேன் சீதையைப் போலவும், யுரேகா போலவும் இவர் பார்த்தேன், பார்த்தேன் எனக்‍ கூறியதும் என்ன ஏது‍ என்று‍ விசாரித்தேன்.

சில மாதங்களுக்கு‍ முன்பு கோவையில் நடந்த  ஒரு‍ புத்தகக்காட்சியின் போது‍, பத்து‍ நாட்களுக்கு‍ தினமும் மாலையில் ஒருவர் பேசுவதாக ஏற்பாடு.  ஒரு மாலைப் பொழுதில் நான் அங்கு காலடி‍‍ எடுத்து‍ வைத்த வேளையில்‍, என் அதிர்ஷ்டம் அன்று‍ பேசியவர்  எஸ்.ரா.

எழுத்தில் பட்டாசு‍ கிளப்புபவர்கள், பேச்சில் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அரங்கில் அமர்ந்த என்னையும், என்னைப் போல மற்றவர்களையும் தன் அற்புத உரையால் வேறு‍ தளத்‌திற்கு‍ அழைத்துச் சென்றார்.  அவரின் பேச்சும், அவர்தம் எழுத்தைப் போலவே ஒரு‍ காந்தத்தை தன்னுள் வைத்தவாறு‍ பிறப்பது‍ நம்முடைய பேறுதான்.

தன் பேச்சினூடே அவர் சொன்ன ஒரு‍ விஷயத்தைத்தான் மேற்கண்ட என் நண்பரிடம் கூறியிருந்தேன்.  அதை இவ்வளவு நாட்களாக மனதில் வைத்துக் கொண்டு‍ இப்போது‍ பார்த்தேன், பார்த்தேன் என கூறுகிறார்.

விருதுநகர் பக்கம் சென்றால் அவசியம் ரயிலடிக்கு‍ சென்று‍ பாருங்கள்.  அங்கு‍ ஒரு‍ கல்வெட்டு‍ இருக்கும்.  கல்வெட்டில் இருக்கும் நாளன்றுதான் அந்த ஊருக்கு‍ தேசப்பிதா மகாத்மா காந்தி வந்தாராம்.  காந்தி தங்கள் ஊருக்கு‍ வந்ததை போற்றும் வகையில் அன்றைய மக்கள் எந்தளவுக்கு‍ சிறப்பித்து‍ கல்வெட்டு‍ நிறுவினார்களோ அதே போல மற்றொருவரும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு‍ அன்றைய தேதியில் வந்ததை நன்றியோடு‍ அந்த கல்வெட்டில் பதி்ந்திருக்கிறார்கள்.

ஆம் வந்தவர் வருண பகவான்.  காந்தி அன்றைய தினம் விருதுப்பட்டி‍ வரும்போது‍ தன்னுடன் மழையையும் அழைத்து‍ வந்திருக்கிறார்!  இன்றும் கல்வெட்டில் இந்த விஷயம் இருப்பதைத்தான் நண்பர் பார்த்துவிட்டு‍ என்னிடம் பரவசமாக கூறினார்.

அற்புதமான தலைவர்,  வெகுளியான மக்கள்,  பொய்க்காத வானம்  இந்த மூன்றுக்கும் ஒரு‍ தொடர்பு இருப்பதாக எனக்குப்படுகிறது.  உங்களுக்கு?

1 comment: