Monday, April 25, 2011

அஞ்சறைப் பெட்டி‍

ஓஷோவின் புத்தகம் ஒன்றில் படித்த ஞாபகம்.  தாத்தாவும், பேரனும் பூங்காவில் நடை பயின்று‍ கொண்டிருந்த போது‍ பேரன் தாத்தாவிடம் கேட்கிறான், ஏன் தாத்தா மரம், செடி‍, கொடியெல்லாம் பச்சையா இருக்குது?

தாத்தா விடையை யோசிக்கிறார்.  குளோரோபில் என்ற பச்சைய சமாச்சாரம் என்றால் பையனுக்கு‍ப் புரியாது‍.    தன் மேலே படும் ஒளியின், பச்சையை தவிர மற்ற நிறங்களை உட்கிரகிப்பதால் பச்சையாக இருக்கிறது‍ என்று‍ சொன்னாலும் அவனுக்கு‍ புரியுமா என்ற சந்தேகம்.  பலமாக சிந்தித்து‍ ஒரு‍ பதிலை இப்படி‍ சொன்னாராம்.

பச்சையாக இருப்பதால் பச்சையாக இருக்குது.

சொல்லிவிட்டு‍ பேரனை பார்த்தார்.  பையனுக்கு‍ பரம திருப்தி.  கரெக்ட் நானும் அதைத்தான் நினைச்சேன் என்று‍ சொன்னானாம். இதற்கு‍ பிறகு‍‍ ஐந்து‍ பக்கங்களுக்கு‍ தத்துவ விளக்கம் கொடுத்திருப்பார் ஓஷோ. 

இதே போல ஒரு‍ நிகழ்ச்சி போன வாரம் நடந்தது‍.   தன் தந்தையிடம்  கேட்கிறான்  அவரது‍ ஏழு‍ வயது‍ பையன்.  ஏன் எல்லா மரமும் பச்சையா இருக்குது. 

தந்தை பதிலளிக்கிறார். மரத்தில் உள்ள இலைகள்ள பச்சையம்கிற ஒரு‍ பொருள் இருக்குது.  அது‍ இருக்கிறதுனால............................

பையன் குழப்பமான முகத்துடன் தந்தையை இடைமறித்து‍ கூறினான்.
போப்பா என்னென்னமோ சொல்ற.   பச்சைத் தண்ணி ஊத்துறதுனால பச்சையா இருக்குது.

***************** 

அந்த சிறுவன் முதன்முதலில் கடலைப் பார்க்கிறான்.  கடலின் பெரும் பரப்பும், அலைகளின் ஆர்ப்பரிப்பும் அவனை சுவாரஸ்யப் படுத்து‍கின்றன.  குளிப்பதற்கு‍ கடலில் காலை நனைக்கிறான்.   விரட்டி‍ வந்த ஒரு‍ சிறு‍ அலை அவனை குப்புற தள்ள, வாய் வழியே கொஞ்சம் கடல் நீர் வாய்க்குள்ளே சென்று‍ விடுகிறது.

கடல் நீரின் உப்புச் சுவை அவனை திக்குமுக்காட வைக்க ஓ, ஓ வென வாயிலிருந்து‍ எச்சிலை துப்புகிறான்.

மிகுந்த கோபத்தோடு‍ தந்தையிடம் கேட்கிறான்.  குளிக்கிற இடத்துல யாருப்பா, இவ்வளவு உப்ப கொட்டி‍ வைச்சுருக்காங்க?
--------------------


No comments:

Post a Comment