Wednesday, June 29, 2011

தலையில் அடித்து‍ கொள்ள ஒரு‍ கதை

கட்டம் போட்ட லுங்கியும், தன் நிறத்துக்கு‍ சற்றும் பொருத்தமேயில்லாத ஒரு‍ டி-ஷர்ட்டும் போட்டுக் கொண்டு‍ மிதிவண்டியில் தனது‍ இரண்டரை வயது‍ பெண் குழந்தையை முன்பக்க கூடையில் வைத்து‍ கொண்டு‍, ஆயிரம் தொழிலாளர்களுக்கு‍ மேல் வேலை பார்க்கும் அந்த கம்பெனியின் முன்பு நின்றான் அவன்.  பதினைந்து‍ நாள் தாடி‍ வேறு.  சோகமாம்.

வெளியே நின்று‍ கொண்டிருநத் செக்யூரிட்டிகளிட்ம் மிகுந்த சோகத்துடன் தன் குழந்தையை காட்டி‍ காட்டி‍ ஏதோ சொல்ல அடுத்த சில மணித் துளிகளில் அத்தொழிற்சர்லை ஏக பரபரப்பு அடைகிறது. டைம் ஆபிஸில் ஓர் ஓரமாக அந்த நபரை உட்கார வைத்து‍ விட்டு‍ உள்ளே செல்கிறார் ஒரு‍ அலுவலர்.

சிறிது‍ நேரம் கழித்து‍ வரும் அவர் அந்த நபரிடம் ஏதோ கூறி ஆமோதிக்கிறார்.  கையெடுத்து‍ கும்பிட்டுவிட்டு‍ அங்கிருந்து‍  விடை பெற்றுச் செல்லும் அந்நபரை பாவமாக பார்த்தபடி‍ எல்லோரும் அனுப்பி வைக்கின்றனர்.  அதற்குள் விஷயத்தை கேட்டு‍ பதறியபடி‍ வந்த (அந்த ஷிப்டில் பணியாற்றும்) ஒரு‍ சில தொழிலாளர்களும் அந்நபருக்கு‍ ஆறுதல் கூறி அனுப்புகினற்னர்.

அளந்தது‍ போதும் விஷயத்தை சொல் என்கிறீர்களா?  அது‍ ரொம்பவும் சின்ன விஷயந்தான்.  வந்த நபரின் மனைவி இங்கு‍ வேலை பார்க்கிறாள்.  கம்பெனியில் காண்டிராக்ட் முறையில் வேலை.  நேற்று‍ வேலைக்கு‍ வந்தவள் இன்று‍ மாலை வரை வீட்டிற்கு‍ செல்லவில்லை. 

தேடிப்பார்த்தாகி வி்ட்டது.  எங்கும காணவில்லை.  இந்த கணவனுக்கோ சின்ன சந்தேகம்.  ஒரு‍ சூபர்வைசரின் பேரைச் சொல்லி அவரும் இவளும் ஓடிப் போயிருக்கலாம் என்று‍ கொளுத்தி்ப் போடுகிறான்.   உள்ளே சென்று‍ பார்த்தால் மேற்படி‍ நபர் மூன்று‍ நாட்களாக வரவில்லை.  வயதும் இந்தப் பெண்ணை விடக் குறைவு.

எல்லோரும் தலையிலே அடித்துக் கொள்கிறனர். அந்தப் பெண் பணிபுரியும் துறை சார்ந்த ஒரு‍ சிலர் அந்தக் கணவனுக்கு‍ ஆறுதல் கூறுகின்றனர்.  அவனோ தன்னைப் பற்றி கவலையில்லை என்றும் இந்தக் குழந்தை இரு‍ நாட்களாக தாய் முகம் காணாது‍ அம்மா அம்மா என அழுது‍ புலம்புவதாகவும் அதைக் கண்டு‍ என்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறி எல்லோரிடமும் இரக்கத்தை வரவழைக்கிறான்.

இவளெல்லாம் ஒரு‍ தாயா?  

தன் குழந்தையை எண்ணிப் பார்க்க வேண்டாவா? 

அவன் கூப்பிட்டால் இவளுக்கு‍ எங்கே போனது‍ அறிவு?

அவன் வயதெனன், இவள் வயதென்ன?

தீர்ப்பு சொன்ன நாட்டு‍ ஆமைகள் பலவாறு‍ சலித்துக் கொண்டன.

அன்று‍ வெள்ளிக்கிழமை.  மறுநாள் அரசு‍ விடுமுறை.  பின்பு ஞாயிறு‍.  திங்களன்று‍ கம்பெனிக்கு‍ வேலைக்கு‍  வருகிறார்கள்.   அந்தப் பெண்ணும் வருகிறாள்.  தளர்ந்து‍ போன நடை. அழுது‍ அழுது‍ சிவந்த கண்கள்.  தலையைக் குனிந்தவாறே வந்து‍ தன் இருக்கையில் அமர்கிறாள்.  

ஒவ்வொருவறாக அவளை  சூ‍ழ்கிறார்கள்.  கோபமாக கேள்வி தொடு‍க்க ஆயத்தமாகும சமயம் அவளே ஆரம்பிக்கிறாள்.  எல்லாவற்றையும் சொல்கிறாள்‌.  இப்பவும் எல்லோரும் தலையில் அடித்து‍ கொள்கிறார்கள்.

விஷயம் இதுதான்.  சம்பந்தப்பட்ட தாடிக்கார பார்ட்டி‍ தண்ணிப் பாரட்டி.  வேலையிலும் இல்லை.  அவ்வப்போது‍ இந்தப் பெண் கொடுக்கும் பணம் போதவில்லை என்று‍ வீ்ட்டிலேயே திருடி‍ நீராகாரம் அடித்திருக்கிறார்.  எவ்வளவோ சொல்லியும் தன் கணவன்  திருந்தாது‍ கண்டு-‍  கோபித்துக்  கொண்டு‍ தன் அம்மா வீட்டிற்கு‍ சென்றிருக்கிறார் இந்தப் பெண்.  அங்கேயே இரண்டு‍ நாட்கள் சொல்லாமல் தங்கி விட்டார். 

கு‍ழந்தையை வைத்துக் கொண்டு‍ தன் கணவன் நன்றாக படட்டும் என்று‍ விட்டுவிட்டாள் இந்தப் பெண்.  ஆனால் எந்த பாரில் எந்த கோணத்தில் படுத்தபடி‍ நம் பார்ட்டி‍ யோசித்தது‍ என்று‍ தெரியவில்லை. அழகாக திரைக்கதை, வசனம் எழுதி தன் குழந்தையையும் கேரக்ட்ர் ஆர்டிஸ்டாக போட்டு‍ ஒரு‍ படத்தை கம்பெனியில் ஓட்டி‍ சென்று‍ விட்டது.

இக்கதையை கேட்டவர்கள் எல்லோரும் இப்பொழுது‍ அவனை அர்ச்சிக்க ஆரம்பிக்க ஒரு‍வர் மட்டும் சற்று‍ யோசித்து‍ விட்டு‍ கேட்கிறார். ஏன் குறிப்பாக  அந்த சூபர்வைசரை அந்த தாடி‍ சொல்லியது.  அவருக்கும், தாடிக்கும், இந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு?

ஒருநாள் நல்ல மூடில் இருக்கும் (கனாக்காலம்?) போது‍ சினிமாவிற்கு‍ சென்றிருக்கிறார்கள்.   இந்த சூபர்வைசரும் அப்படத்திற்கு‍ வந்திருக்கிறார்.  தன்னுடன் பணியாற்றுகிறாரே என்று‍ இவரை தன் கணவனுக்கு‍ இந்தப் பெண் அறிமுகம் செய்து‍ வைக்க நம் தாடியோ அன்றே திரைக்கதை - வசனத்தை ரெடி‍ செய்து‍ விட்டு‍ அரங்கேற்றத்திற்கு‍ நாள் பார்த்துக் கொண்டிருந்திரு‍க்கிறது.

அந்தப் பெண் இந்த சமயம் பார்த்து‍ எஸ்கேப்பாக அழகாக அண்ணன் அடித்து‍ ஆடிவி்ட்டார்.   எல்லாம் சரி அந்த சூபர்வைஸர் மூன்று‍ நாடகள் வரவி்ல்லை என்று‍ சொன்னாயே அது‍ என்ன கதை என்கிறீர்களா?  அம்மாவுக்கு‍ உடல்நிலை சரியில்லை என்று‍ வெளியூருக்கு‍ சென்று‍ விட்டார்.  

அந்த சூபர்வைஸரும் விஷயத்தை கேள்விபட்டு‍ தன் தலையில் அடித்துக் கொண்டது‍ தனிக்கதை. எல்லாமுமே தாடிக்கு‍ சாதகமாக அமைந்தது‍ ஆச்சர்யம்தான்.




Thursday, May 26, 2011

ஹவுஸ் ஃபுல்

என்னை நேரிடையாக பாதிக்கின்ற விஷயம் என்பதால் கொஞ்சம் சீரியஸாக முயன்றிருக்கிறேன்.  வழக்கம் போல என் மழலை எழுத்துகள் கொஞ்சம் உங்களை இம்சி்த்தாலும் என் உளக்கிடக்கையை (?) தாங்கள் புரிந்து‍ கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சென்ற அதிமுக ஆட்சியில் லாட்டரி ஒழிப்பு என்பது‍ காலாகாலத்திற்கும் அவர்களுக்கு‍ ஒரு‍ பெயரை ஏற்படுத்தியது‍ போல, திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிற்றுந்து‍ திட்டமு‍ம், உழவர் சந்தையும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த முறை சமச்சீர்கல்வி திமுகவிற்கு‍ ஒரு‍ நல்ல பெயரை பெற்று‍ தநத்து‍ என்னவோ நிஜம்.  இவர்களுக்கு‍ பதவி பறி போக 2G, குடும்ப ஆதிக்கம், விலைவாசி என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சமச்சீர்கல்விதிட்டம் மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது‍ என்பதை மறுக்க முடியாது.

2010-11ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புக்கு‍ சமச்சீர்கல்விதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்ற முதல் தலைமுறை மாணவர்கள் மிகச்சரியாக ஆறாம் வகுப்புக்கு‍ வரவும், இந்த திட்டம் அதே வருடத்தில் நடைமுறைக்கு‍ வரவும் மிகச் சரியாக அமைந்தது.

அரசு‍ ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு‍ சிலரிடம் பேசிய போது‍ அவர்கள் சொன்ன விஷயம் சுவாரஸ்யமானது.  எங்கள் மாணாக்கர்கள் செயல்வழிக் கற்றல் மூலம் கல்வி பயின்று‍ வருவதால் இன்னும் ஐந்து‍ வருடங்கள் கழித்து‍ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு ரிசல்டை பாருங்கள், அசந்து‍ விடுவீர்கள்.   3 மற்றும் 4 வகுப்பு மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு‍ பதில் சொல்ல நாங்கள் திணற வேண்டியுள்ளது.  

இனி அடுத்து‍ சமச்சீர்கல்வியும் பயிலும்போது‍ எந்த மெட்ரிக் மாணவனுக்கும் சளைக்காமல் எங்கள் பையன்களும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள்.

என் நண்பர் ஒருவரின் மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.  அவன் கிராமத்தில் செ.வ.க மூலம் 1 லிருந்து‍ 5 வரை படித்தவன்.  பிறகு‍ இங்கு‍ வந்து‍ சமச்சீர்கல்வியில் ஆறாம் வகுப்பு முடித்து‍ ஏழாவதிற்கு‍ தயாராகி விட்டான்.

வாராவாரம் இண்டெர்நெட் மையத்திற்கு‍ தன் தகப்பனாரை அழைத்து‍ செல்வான்.  கேட்டால் பிராக்டிகல் என்று‍ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி  பயமுறுத்துவான். 

அடியேன் படிக்கிற போது‍ பிளஸ் டூ வரை பிராக்டிகல் என்பதிற்கு‍ என்ன அர்த்தம் என்பதே எனக்கு‍ தெரியாது‍ என்பதை இங்கே கூச்சத்துடன் பதிவு செய்கிறேன். 

தண்ணீருக்கு‍ள் காய்களை (vegetables) போட்டால் எந்தெந்த காய்கறிகள் மூழ்கும்,  எவையெவை மிதக்கும்.

நாட்டுப்புரப்பாட்டு‍ நெட்டிலிருந்து‍ பிரிண்ட் அவுட் எடுக்கனும்.  எப்படி‍ எடு்க்கிறது?  (புரமா, புறமா இடையில் ஒரு‍ சர்ச்சை வந்தது‍ நினைவிருக்கலாம்)

பள்ளிக்கூடத்திலிருந்து‍ நம்ம வீடு‍ எத்தனை தப்படி‍ இருக்கும்.

வீட்டில் உள்ள அறைகளோட நீள அகலம் என்ன?  எத்தனை அடி?

எந்த பொருள் வாங்கினாலும் manufacturing date மற்றும் expiry date ஏன் பார்க்கனும்?

சிறுவர்களை சகட்டு‍ மேனிக்கு‍ கேள்வி கேட்க தூண்டுவதுதான் சமச்சீர்கல்வி.    ஆறாம் வகுப்பு பாடப்புத்தகம் கிடைத்தால் படித்து‍ பாருங்கள்.  அட்டகாசமான எழுத்து‍ நடையில் விறுவிறுப்பான ஒரு‍ நாவலைப் படிப்பது‍ போல இருக்கும். 

மனசாட்சியுள்ள எந்தவொரு‍ அரசுப்பள்ளி ஆசிரியரையும் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரிய வரும்.  வேலைப்பளு‍ அவர்களுக்கு‍ கூடியுள்ளது‍ என்னவோ உண்மைதான்,  ஆனால் அதனால் விளையும் நன்மை அளப்பரியது.

பங்களாவில் இருப்பவனும், குப்பத்தில் இருப்பவனும் ஒரே சப்ஜெக்டை படிப்பதா? கெளரவம் என்னாவது?   போட்டி‍ அதிகரிக்க, அதிகரிக்க மேட்டுக்குடி‍ மக்களுக்கு‍ கொஞ்சம் தலைவலிதான்.  எனவே கச்சிதமாக காயை நகர்த்தி முளையிலேயே நடுத்தர மற்றும் குப்பத்து‍ மூளையை மழுங்கடிக்க முயன்று‍ வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

ஆறாம் வகுப்பு மாணவனுக்கு‍ நான்காம் வகுப்பு பாடம் எதற்கு‍ என்று‍ மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கேட்கிறார்கள்.  சரி! ஏழாம் வகுப்பு மாணவனுக்கு‍ கரப்பானின் இரத்த ஓட்ட மண்டலம் எதற்கு?  கேட்க தெரியாமல் முழிப்பது‍‍ ஏழாம் வகுப்பு மெட்ரிக் மாணவனேதான்.

தரம் இல்லையெனில் தரத்தை மேம்படுத்தட்டும்.  சர்ச்சைக்குரிய பாடங்களை நடத்த வேண்டாம் என அறிவிப்பு செய்யட்டும்.  ஒட்டு‍ மொத்த வீட்டையே கொளுத்துவது‍ என்ன நியாயம்?

சமச்சீர்கல்வியை படித்தா அப்துல் கலாம் ராக்கெட் விட்டார்.  இது‍ ஒரு‍ மெட்ரிக் பிரகஸ்பதியின் கேள்வி.  பி.எட்டை ஒழுங்காக படித்திருந்தால் இந்த மாதிரியான அச்சுப்பிச்சான கேள்விகளை அவரால் கேட்க முடியாது.

ஆம் குழந்தைகளில் பல ரகம் உண்டு.  மீத்திறன் பெற்ற குழந்தை (gifted child), சராசரி குழந்தை, கற்றல் குறைபாடு‍ கொண்டது,  மெதுவாக கற்கும் குழந்தை என பலப்பல.  கவனிக்கவும்: மக்கு‍ குழந்தை என்று‍ இதுவரை ஒரு‍ குழந்தை கூட இந்த பூவுலகில் பிறக்கவில்லை.

இதில் நமது‍ முன்னாள் குடியரசுத் தலைவர் மீத்திறன் பெற்ற குழந்தை என்ற கேட்டகரியில் வருவது‍ உங்களுக்கு‍ இப்போது‍ புரியும்.    ஆனால் சமச்சீர்கல்வி என்பது‍ இராமேஸ்வரம் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா  மாவட்டங்களிலும், எல்லா தெருக்களிலும் ஒரு‍ அப்துல் கலாம் வர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே.

இருக்கின்ற கவிஞர்கள் இம்சைகள் போதும்
என்னை கவிஞன் ஆக்காதே

வைரமுத்து‍வின் ஒரு‍ திரைப்படபபர்டல் வரியிது.  

இருக்கின்ற புத்திசாலிகளின் இம்சைகள் போதும்
இன்னும் புத்திசாலிகள் வேண்டாம் -  என்று‍ ஹவுஸ் ஃபுல் பலகையை ஒவ்வொரு‍ பள்ளியிலும் மாட்டி‍ வைக்க முடிவெடுத்திருப்பது‍ மெக்கல்லாவை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.  இளைய தலைமுறையை............?

2G என ஒன்று‍ இல்லாமல் இருந்து‍, இவர்கள் வருந்தி வருந்தி  என்னதான் களப்பணி ஆற்றியிருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பார்களா என்பது‍ இங்கு‍ கவனிக்க வேண்டிய கேள்வி.  பெருவாரியான வெற்றியை வலுக்கட்டாயமாக மக்கள் இவர்கள் மீது‍ சுமத்தியிருக்கிறார்கள் என்பதே உண்மை.  

அதைப்புரிந்து‍ கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று‍ முடிவெடுப்பது‍ம் அதுவும் எண்ணிக்கையில் ஆயிரத்துக்குள் அடங்கிப் போகும் மெட்ரிக் மாபியாக்களுக்கு‍ ஆதரவு தருவதும் ப்ச் என்னவோ போங்க.

அவிய்ங்களும், (சென்ற ஆட்சியாளர்கள்)  இவிய்ங்களும் ஏதோ ஒரு‍ புள்ளியில் இணைந்து‍ விடுவதாகத்தான் எனக்கு‍ப் படுகிறது‍.  உங்களுக்கு.....?

Monday, May 16, 2011

படித்ததில் பிடித்தது‍

1971ஆம் ஆண்டு...................

பொதுத்தேர்தல் முடிந்து‍ முடிவுகள் வந்து‍ விட்டன.

தமிழகம் காமராஜை இரண்டாவது‍ முறையும் ஏமாற்றி விட்டது.

இந்திய அரசியலில் இனி இந்திரா காந்தியா?  காமராசரா?   எனற் கேள்விக்கு‍ இந்திராவே என்ற பதில் கிடைத்தது.

காமராஜை தோற்கடிக்க இந்திராவுக்கு‍ கருணாநிதி துணை நின்றார்.

ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி, ஜனசங்கம்  மூன்றும் கூட்டணி அமைத்துத்‌ தேர்தலில் போட்டியிட்டன.

1967இல் கழகத்துடன் நின்ற ராஜாஜி 1971ல் காமராசரோடு‍ கை கோர்த்து‍ நின்றார்.

நீண்டகால அரசியல் பகைவர்களான காமராசரும் ராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றி முழக்கமிட்ட மெரினா கடற்கரைக் கூட்டத்தில் சென்னை நகரமே திரண்டு‍ நின்றது.

எதற்கும் மயங்காத காமராசரே அன்று‍ கூடிய கூட்டத்தில் மயங்கினார்.

இரகசிய போலீஸ் காமராசர் கோட்டையில் அமர்வது‍ நிச்சயம் என்று‍ கருணாநிதிக்குக் குறிப்பு அனுப்பியது.

நாளை என்னைக் கோட்டையில் சந்தியுங்கள் - என நிருபர்களிடம் காமராஜ் உறுதியாக உரைத்தார்.

ஆனால் இந்தியா முழுவதும் இந்திரா காங்கிரஸ் பெரு‍ வெற்றி பெற்றது.

தோல்வியை ஜீரணிக்க முடியாத வாஜ்பாய் போனற் பெரிய தலைவர்கள் அனைவரும் இந்திரா காங்கிரஸ் வெற்றிக்கு‍ ரஷ்ய மையே காரணம் எனற்னர்.

ஆனால் காமராஜோ நாம் தோற்றது‍ உண்மை.  உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் நேர்மையான அரசியல்.  ரஷ்ய மை அது‍ இதுன்னு‍ சமாதானஞ்‍ சொல்றது‍ சரியில்லேன்னேன்.  இந்த அரசியல் ஜனங்களிடம் எடுபடாதுன்னேன் என சமாதானம் கூறினார்.

1967ல் மக்கள் தீர்ப்பை எப்படி‍ மனங்கோணாமல் அவர் ஏற்றுக் கொண்டாரோ, அதே பெருந்தன்மையுடன் 1971ல் தனக்கு‍ எதிராக அளித்த தீர்ப்பையும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்.

 - தமிழருவி மணியன்
    அடிமனத்தின் சுவடுகள் நூலிலிருந்து‍.

அஞ்சறைப் பெட்டி‍

சென்ற வருடம் IAS தேர்வு முடிவுகளில் முதலாவதாக வந்து‍ கலக்கியவர் ஒரு‍ கஷ்மீர் இளைஞர்.  இப்போது‍ தமிழகத்தை சேர்ந்த ஒரு‍ இளைஞி முதல் மார்க் எடுத்து‍ தமிழகத்திற்கு‍ பெருமை சேர்த்திருக்கிறார்.  முதல் பத்து‍ இடங்களுக்கு‍ள் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு‍ பேர் தேறியிரு‍ப்பதும், மொத்த தேர்ச்‌சியில் கிட்டத்தட்ட 15% பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் நமக்கெலாம் ஒருவகையில் பெருமைதான். 

இன்னும் பதினைந்து‍, இருபது‍ வருடங்களுக்குப் பிறகு‍ இந்தியாவின் மிக உயரிய பதவிகளிலெலாம் நம்மாட்களின் கொடிதான் பறக்கும்.  இன்று‍ கேரள சேட்டன்களின் ஆதிக்கம் எப்படி‍ டில்லியில் பறக்கிறதோ அதே போன்று‍ ஒரு‍ நிலை வருங்காலத்தில் வரும் என்பது‍ சர்வ நிச்சயம்.  வருடா வருடம் நம் மாநிலத்திலிருந்து‍ தேர்வு பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகிக் கொண்டு‍ செல்வதே இதற்கு‍ சாட்சி.

ஆனால் அப்போது‍  அரசியலில் இருக்கப் போகும் நம் அரசியல் தலைவர்கள் இந்த IAS-களை பயன்படுத்தி என்னென்ன நலத்திட்டங்களை வெகு‍ சுளுவாக தமிழகத்திற்கு‍ கொண்டு‍ வரப்போகிறார்கள்  என்பது‍ நம் தலையெழுத்தை வைத்தே உள்ளது.

***********************

மாம்பழத்தின் ஜாதகக் கோளாறு‍ இப்போது‍ சாத்துக்குடியையும் பிடித்து‍ கொண்டு‍ விட்டது.  படிகாரக்கல்லைக் கொண்டு‍ பழுக்க வைப்பதால் மனிதனுக்கு‍ ஏற்படும் கோளாறு‍ கொஞ்ச நஞ்சமல்ல.   அதை தெரிந்து‍ கொண்டும் திருந்தாத ஜென்மங்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக இப்போது‍ சாத்துக்குடிப் பக்கமும் தங்கள் வேலையை துவக்கியிருப்பது‍ திமிர்த்தனத்தின் உச்சம். 

கோவையில் சென்ற வாரம் 4 டன் அளவிலான சாத்துக்குடிகள் பழ மண்டிகளில் இருந்து‍ கைப்பற்றப்பட்டு‍ மாவட்ட சுகாதார ஆய்வாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன.  காரணம் படிகாரம் கொண்டு‍ அவற்றை பழுக்க வைத்தது‍தான்.

அதிரடி‍ நடவடிக்கைக்கு‍ தேர்தல் ஆணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  எந்த மேலிட தலையீடும் இல்லாமல் நடந்த இந்த அதிரடி‍ நடவடிக்கை புதிய ஆட்சியிலும் தொடர வேண்டும்.

*******************

நண்பரின் வீட்டிற்கு‍ நல்ல வெயில் நேரத்தில் சென்றிருந்தேன்.  என்னைப் பார்த்ததும் வரவேற்றவர் சமையலறையை நோக்கி "இன்னொரு‍ டம்ளர் கொண்டு‍ வா" என குரல் கொடுத்தார்.

"டீ, காபியெல்லாம் வேண்டாம்.  வெயில்ல ஒண்ணும் சமாளிக்க முடியாது."
என சமாளித்தேன்.  சூடாக ஏதேனும் குடித்து‍ தொலைத்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு‍ பொங்கி வழியும் (குறிப்பாக கழுத்துப் பகுதி) இந்த வியர்வை சனியனுக்கு‍ பயந்து‍ பல விஷயங்களை ஒதுக்க வேண்டியுளள்து. 

அவரின் மனைவி சிறிது‍ நேரத்தில் ஒரு‍ கண்ணாடி‍ தம்ளரில் கரு‍ஞ்சிவப்பில் ஏதோ ஒரு‍ திரவத்தைக் கொண்டு‍ வந்தார்.  கூல்டிரிங்கா !   அடக் கடவுளே இதுவும் நமக்கு‍ ஒத்துக் கொள்ளாத  விஷயமாயிற்றே என்றெண்ணியவாறே வாங்கினேன்.

ஆனால் ஒரு‍ வாய் வைத்ததும் வியப்படைந்தேன். அது‍ குளிர்பானம் அல்ல.  குளிர்ந்த சாறு. ஆனால் தெரிந்த ஏதோ ஒன்றிலிருந்துதான் இந்த சாறை தயாரித்திருந்தார்கள் என்பது‍ புரிந்தது.  முடிந்த மட்டும் என் சமையல் அறிவைக் கொண்டு‍ (!) யோசி்த்தும் ஒன்றும் புலப்படாது‍ போகவே  என்னவென விசாரித்தேன்.  பீட்ரூட் + வெள்ளை பூசணி கலந்த சாறாம். இரண்டையும் மிக்ஸியில் அடித்து‍ சாறு‍ பிழிந்து, வெல்லம் மற்றும் ஏலக்காயை தட்டி‍ போட்டு‍ வடிகட்டி‍ சிறிது‍ நேரம் பிரிட்ஜில் வைத்து‍ கொடுத்திருக்கிறார்கள். ருசி......... அடடா  செய்து‍ பார்த்து விட்டு‍ சொல்லுங்கள் அல்லது‍ அனுபவியுங்கள்.  சத்துக்கு‍ சத்து, பானத்திற்கு‍ பானம்.

***************

Wednesday, May 11, 2011

காந்தி வந்த ஊர்

விருதுநகருக்கு‍ ஒரு‍ வேலையாக சென்றிருந்த என் நண்பர் ஒருவர் "பார்த்தேன், பார்த்தேன்" என்றபடி‍ வந்தார்.  கண்டேன் சீதையைப் போலவும், யுரேகா போலவும் இவர் பார்த்தேன், பார்த்தேன் எனக்‍ கூறியதும் என்ன ஏது‍ என்று‍ விசாரித்தேன்.

சில மாதங்களுக்கு‍ முன்பு கோவையில் நடந்த  ஒரு‍ புத்தகக்காட்சியின் போது‍, பத்து‍ நாட்களுக்கு‍ தினமும் மாலையில் ஒருவர் பேசுவதாக ஏற்பாடு.  ஒரு மாலைப் பொழுதில் நான் அங்கு காலடி‍‍ எடுத்து‍ வைத்த வேளையில்‍, என் அதிர்ஷ்டம் அன்று‍ பேசியவர்  எஸ்.ரா.

எழுத்தில் பட்டாசு‍ கிளப்புபவர்கள், பேச்சில் சொதப்பி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அரங்கில் அமர்ந்த என்னையும், என்னைப் போல மற்றவர்களையும் தன் அற்புத உரையால் வேறு‍ தளத்‌திற்கு‍ அழைத்துச் சென்றார்.  அவரின் பேச்சும், அவர்தம் எழுத்தைப் போலவே ஒரு‍ காந்தத்தை தன்னுள் வைத்தவாறு‍ பிறப்பது‍ நம்முடைய பேறுதான்.

தன் பேச்சினூடே அவர் சொன்ன ஒரு‍ விஷயத்தைத்தான் மேற்கண்ட என் நண்பரிடம் கூறியிருந்தேன்.  அதை இவ்வளவு நாட்களாக மனதில் வைத்துக் கொண்டு‍ இப்போது‍ பார்த்தேன், பார்த்தேன் என கூறுகிறார்.

விருதுநகர் பக்கம் சென்றால் அவசியம் ரயிலடிக்கு‍ சென்று‍ பாருங்கள்.  அங்கு‍ ஒரு‍ கல்வெட்டு‍ இருக்கும்.  கல்வெட்டில் இருக்கும் நாளன்றுதான் அந்த ஊருக்கு‍ தேசப்பிதா மகாத்மா காந்தி வந்தாராம்.  காந்தி தங்கள் ஊருக்கு‍ வந்ததை போற்றும் வகையில் அன்றைய மக்கள் எந்தளவுக்கு‍ சிறப்பித்து‍ கல்வெட்டு‍ நிறுவினார்களோ அதே போல மற்றொருவரும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு‍ அன்றைய தேதியில் வந்ததை நன்றியோடு‍ அந்த கல்வெட்டில் பதி்ந்திருக்கிறார்கள்.

ஆம் வந்தவர் வருண பகவான்.  காந்தி அன்றைய தினம் விருதுப்பட்டி‍ வரும்போது‍ தன்னுடன் மழையையும் அழைத்து‍ வந்திருக்கிறார்!  இன்றும் கல்வெட்டில் இந்த விஷயம் இருப்பதைத்தான் நண்பர் பார்த்துவிட்டு‍ என்னிடம் பரவசமாக கூறினார்.

அற்புதமான தலைவர்,  வெகுளியான மக்கள்,  பொய்க்காத வானம்  இந்த மூன்றுக்கும் ஒரு‍ தொடர்பு இருப்பதாக எனக்குப்படுகிறது.  உங்களுக்கு?

Tuesday, May 10, 2011

அஞ்சறைப் பெட்டி‍

மனைவியின் சொந்த கிராமத்திலிருந்து‍ போன்.  தன் அம்மாவுடன் வழக்கமான உரையாடல்களுக்குப்‍ பிறகு‍, என் பாரியாள் அதி்ர்ச்சி கலந்த குரலில், அப்படியா!, எப்போ? எப்படி?  அடக் கடவுளே! என்று‍ உச் கொட்ட என்ன, ஏது‍ வென்று‍ நான் பதற்றமானேன்.  போனை வைத்து‍ விட்டு‍ விஷயத்தை சொல்ல சொல்ல நானும் மேற்கண்ட அதி்ர்ச்சி சொற்களை உதிர்க்க ஆரம்பித்தேன்.  விஷயம் இதுதான்.

தன் அம்மா வீட்டுக்கு‍ பக்கத்து‍ வீட்டில் ஒரு‍ கூட்டுக் குடும்பம் வசிக்கிறது.  அக்குடும்பத்தின் இரண்டாவது‍ மருமகள் நாயால் இறந்து‍ விட்டார்.  அவருக்கு‍ பத்து‍ மற்றும் எட்டு‍ வயதில் இரு‍ பெண் குழந்தைகள்.  கணவர் விவசாயி.  கவனிக்க நாய் கடியால் அல்ல.  நாயால். 

குழம்ப வேண்டாம்.  அந்த பெண்ணின் கணவரை சில மாதங்களுக்கு‍ முன்பு ஒரு‍ நாய் கடித்திருக்கிறது.  இவரும் ஏதோ நாட்டு‍ மருந்தை  உட்கொண்டு‍ விட்டு, அதீத நம்பிக்கையில் தனக்கு‍ ஏதும் நேராது‍ என்று‍ எண்ணி அசட்டையாக விட்டுவிட்டார்.  சில நாட்களில் அந்த நாயும் இறந்து‍ விட்டதாம்.  அப்பவும் எந்தவித மேல்சிகிச்சையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். 

ஆனால் விதி வேறு‍ வகையில் விளையாடி‍யிருக்கிறது.  ஆமாம் இவரின் உயிரணு‍ மூலம் அவர் மனைவிக்கு‍ அந்த கிருமி சென்று‍ அவரின் உயிரை எடுத்துவிட்டது.  உயிர் போகும் நாள் வரை எந்தவித அறிகுறியும் இல்லையாம்.  இறுதி நாளன்று‍ நாயைப் போலவே பிராண்டுவது, இரைப்பது, வாயில் நீர் வடிவது‍ என பல சிரமத்தை அந்த பெண் அனுபவித்து‍ விட்டு, 108லேயே உயிரை வி்ட்டுவிட்டாராம்.

அடுத்த லீவுக்கு‍ உங்க ஊருக்கு‍ வரணும். அப்படியே ஊட்டிய சுத்தி பார்க்கணும் என்ற போன வாரம் நாங்கள் ஊருக்கு‍ போயிருந்த போது‍ அந்தப் பெண் ஆசையாசையாக கூறியது‍ இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு‍ இருக்கிறது.

****************************

வங்கியில் கடைசி இருப்பாக இருந்த நூறு‍ ரூபாய்க்கும் ஒரு‍ செலவு வந்து‍ விட, அதை எடுக்க ATM வாசலில் நின்று‍ கொண்டிருந்தேன்.  உள்ளே சென்ற ஒரு‍ பெண் நீண்ட நேரமாக மெசினுடன் போராடிக் கொண்டிருந்தார்.    பின்னர் ஒரு‍ மாதிரி குழப்பமான முகத்துடன் வெளியே வந்தவர் வங்கிக்குள் சென்றுவிட்டு‍ மீண்டும் கோபத்துடன் வெளியே வந்தார்.  பக்கத்திலிருந்த மற்றொரு‍ பெண் என்ன ஆச்சுங்க எனக் கேட்க விஷயத்தை சொன்னார்.   ஏடியெம் கார்டை செருகி, கோட் நம்பரை அடித்து‍ விட்டு‍, தொகையையும் குறிப்பிட்ட பின்னர் பணம் வராமல், வெறும் ஸ்டேட்மென்ட் மட்டும் வந்திருக்கிறது.  சரி அதனால் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

வெறும் நூறுரூபாய்க்கெல்லாம் ஏடியெம் வாசலில் நிற்கும் என் போன்ற பிரகஸ்பதி்க்கெல்லாம் இது‍ பகீர் நிகழ்வுதான்.  ஆமாம் பணத்தை எடுத்தது‍ போல கழித்து‍ காட்டி‍ விட்டு‍, மீதி உள்ள தொகைக்கு‍ மட்டும் ஸ்டேட்மென்ட் வந்திருக்கிறது.  தொகையை எடுத்தது‍ போல டெபிட் செய்திருக்கிறது‍ அந்த ஏடியெம்.

வேறொரு‍ வங்கியின் அட்டையை இந்த வங்கி ஏடியெம்மில் நுழைத்ததால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.   எனவே அந்த வங்கியிடமே புகார் தெரிவியுங்கள் என வங்கி அலுவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார்.


**************************

Saturday, May 7, 2011

தனியார் கோயில்கள்

அது‍ ஒரு‍ வழிபாட்டு‍ தலம்.  வேற்று‍ இனத்தை சேர்ந்த ஒருவன் வழிபட அங்கு‍ வருகிறான்.  கடவுளுக்கு‍ நெருக்கமான (!) ஒரு‍ சிலர் அவனை உள்ளே விட மறுக்கிறார்கள். ஏன் எனக் கேட்ட போது‍ அவனுடைய நிறம், குடிப்பிறப்பு ஆகியன காரணங்களாக காட்டப்படுகின்றன.  பலநாள் முயற்சித்தும் அந்த நவீன நந்தனாருக்கு‍ அனுமதி கிட்டவில்லை.  இறுதியாக ஒருநாள் மிகுந்த மகிழ்வுடன் அத்தலத்தின் வாசலுக்கு‍ வருகிறான்.  அங்கு‍ காவல் காக்கும் ஒருவன் கோபமும், சலிப்புமாக அவனை திட்ட எத்தனிக்கும் போது இவன் கூறுகிறான், "நேற்று‍ என் கனவில் கடவுள் வந்து,  இனிமேல் அங்கே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.  ஏன் என வினவியதற்கு‍ அவர்கள் என்னையே அங்கிருந்து‍ விரட்டிவிட்டார்கள்.  நான் இல்லாத இடத்தில் உனக்கு‍ என்ன வேலை"  இந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இது‍ போன்ற அனுபவத்தை நானும் சமீபத்தில் பெற்றேன்.

மற்ற ஊர்களில் எப்படியோ தெரியவில்லை.  கோவையைப் பொறுத்தமட்டில், இங்குள்ள மில் மற்றும் தொழிற்சாலைகளில் டாய்லட் மற்றும் பணியாளர்களுக்கான ரெஸ்ட் ரூம் வசதி இரு‍க்கிறதோ இல்லையோ அட்டகாசமான ஒரு‍ கோயிலை வாஸ்து‍ பார்த்து‍ கட்டி‍ விடுவார்கள். பெரும்பாலும் பிள்ளையார் கோயில்தான்.   அவரும் நடக்கிற அக்கிரமங்களை பார்த்தபடி‍ தேமே என்று‍ உட்கார்ந்திருக்க வேண்டும்.  அதற்கு‍ தினப்படி‍ பூஜை செய்வதற்கு‍ ஒரு‍ அர்ச்சகர் வேறு‍ வருவார்.  இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான கார்பரேட் அர்ச்சகர்கள் பைக்கில்தான் வந்து‍ இறங்குகிறார்கள். மாத இறுதியில் அர்ச்சகர் தன் சம்பளத்திற்காக ஒப்பந்த பணியாளர்களோடு‍  பெஞ்சில், பர்ஸனல் ஆபிஸ் வாசலில் மணியை பார்த்தபடி‍ அமர்ந்திருப்பது‍ சுவாரஸ்யமான கொசுறு‍ செய்தி.  

சரி விஷயத்திற்கு‍ வருகிறேன்.  இது‍ போன்ற கோயில்களுக்கு‍ ஒரு‍ சில விசேஷ நாட்களை தவிர மற்ற நாட்களில்  பொதுமக்களை உள்ளே அனுமதிப்பதில்லை.  உள்ளே செல்வதற்கு‍  பொதுவாக யாரும்  அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பதே கவனிக்க வேண்டி‍ய செய்தி.

ஆனால் ஒரு‍ சில தனியார் நிறுவனங்கள் தங்கள் இடத்தில் அட்டகாசமான ஒரு‍ கோயிலை கட்டியிருப்பார்கள்.  குறிப்பிட்ட அந்த இடம் தொழிற்சாலையாகவோ அல்லது‍ ஏதேனும் ஒதுக்குப்புறமான தோட்டமாகவோ அல்லது‍ மலை பாங்கான பகுதியாகவோ கூட இருக்கலாம்.  அந்த கோயிலுக்கு‍ ஏதேனும் ஒரு‍ விதத்தில் யாரோ ஒரு‍ புண்ணியவான் விளம்பரத்தை தேடிக்‍ கொடுத்துவிட, மின்னல் வேகத்தில் மௌத் அட்வர்டைசிங்கோ ஏதோ சொல்வார்களே, அது‍ போல மக்களிடம் பரவி ஒரு‍ மினி சுற்றுலா தலமாக அந்த கோயி்லை ஆக்கிவிடுவார்கள்.  

அது‍ போல ஒரு‍ கோயிலுக்குத்தான் அண்மையில் செல்லும் வாய்ப்பு வந்தது.  ஆனால் அங்கு‍ போய் சேரும் வரை அது‍ தனியாருக்கு‍ சொந்தமான கோயில் என்று‍ எனக்கு‍ தெரியவி்ல்லை.  அரை கி.மீட்டருக்கு‍ முன்னதாகவே எல்லா வண்டியையும் நிறுத்தி விட்டு‍ நடக்க விட்டார்கள்.   சரி குறுகலான சாலையாக இருப்பதால் இதை பெரிது‍ படுத்த தேவையில்லை என  நினைத்தவாறு‍ நடக்க ஆரம்பித்தோம்.  ஆனால் அந்த காவலர் சொன்ன விதம் இருக்கிறதே,  அப்போதே எனக்கு‍ மைல்டாக ஒரு‍ டவுட் ப்ளஸ் சுவாரஸ்யம்.  இங்கு‍ ஏதோ ஒன்று‍ வித்தியாசமாக நடக்கப் போகிறது‍ என்று. செக்யூரிட்டி‍ மற்றும் வாட்ச்மேன்களின் பேச்சு‍ மற்றும் பாடி‍ லர்ங்வேஜ்களிலேயே ஒரு‍ நிறுவனத்தின் இலட்சணத்தை ஓரளவுக்கு‍ அனுமானிக்க முடியும் என கேள்வி பட்டிருக்கிறேன். 

கோயிலுக்கு‍ சென்றால் வெளி வாசலில் நான்கைந்து‍ தனியார் நிறுவன காவலர்கள் நின்று‍ கொண்டு‍, கோயிலுக்கு‍ வருபவர்களிடம்  கையை ஆட்டி‍ ஆட்டி‍ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  விஷயம் இதுதான். குழந்தைகள் சத்தம் போடக் கூடாது‍ ஸாரி கூடாதாம்.  பெண்களின் வளையல், கொலுசு‍ சத்தம் கூட கேட்கக் கூடாதாம்.  உரக்க பேசக் கூடாதாம்.  இது‍ போல பல தாம்கள்.  தவிரவும் ஒருசில அன்புகட்டளைகளை வேறு‍ பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

அதன் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான். இது‍ தனியாருக்கு‍ சொந்தமானது‍.  கட்டியவர் இவர்.  கோயில் இருக்கும் நிலம் இன்னாருடையது.  பொதுமக்களி்டமிருந்து‍ தம்பிடி‍ காசை கூட வாங்காமல் கட்டியிருப்பதால் எந்த நேரத்திலும்  காரணமே கூறாமல் கோயிலுக்குள் இருப்பவர்களை வெளியேற்ற நிர்வாகத்திற்கு‍ முழு உரிமை உண்டு‍.  யாரை உள்ளே அனுமதிக்க வேண்டும், வேண்டாம் என்பதில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

இதைப் படித்தால் எந்த வலைப்பூ வைத்திருப்பவனாவது‍ உள்ளே செல்வானா?  இந்த சுயமரியாதை என்ற வார்த்தைக்கு‍ என்ன அர்த்தமோ எனக்கு‍ தெரியாது.  ஆனால் உள்ளே செல்ல மனமில்லாமல் வெளியே அமர்ந்து‍ விட்டேன்.

நீ ஒரு‍ பெரிய ,,,,,,,,,,,,,,,,, ?

கோடிட்ட இடத்தை எந்த வார்த்தையாலாவது‍ நிரப்பிக் கொள்ளுங்கள்.  எனக்கு‍ கவலையில்லை.  ஆனால் என்னுடைய கேள்வி இதுதான்.  உள்ளே இருக்கும் கடவுள் பகட்டான கோயிலைப் பார்த்தோ, வங்கி இருப்பு மற்றும் ஆடம்பரத்தை பார்த்தோ அருள் பாலிப்பதில்லை.  அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என சொல்வார்களே, அது‍ போல அவனருள் பெறவும் அவனுடைய கருணை வேண்டும்.  இராணுவ கண்டிப்பை காட்டுவதற்கு‍ கோயில் தகுந்த இடமி்ல்லை. 

ஆயிரம் சொன்னாலும் அது‍ ஒரு‍ தனியார் கோயில்.  அவர்கள் சொல்வதை கேட்டுதானே ஆக வேண்டும்.  இல்லையென்றால் எதற்காக அங்கு‍ நீ செல்ல வேண்டு‍ம் என நீங்கள் கேட்கலாம். 

கோயிலை பொதுமக்களுக்கு‍ என திறந்து‍ விடும் போதே, ஒரு‍ சில நீக்கு‍ போக்குளையும் செய்ய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.  இல்லாவிடடர்ல் யாருக்கும் அனுமதி இல்லை என்றே கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடலாமே. 

இரண்டாவது‍, தராதரம் இல்லாமல் எல்லோரையும் சிறைக் கைதிகளைப் போல விரட்டும் ஊழியர்கள். (அர்ச்சகர்கள் உட்பட)  இவர்கள் முதலாளி சொல்வதை தலையால் செய்து‍ முடிக்கும் அசகாய சூரர்கள்.  என்ன நமக்குத்தான் எரிச்சல் தலை தூக்குகிறது. 

ஆக தெரியாத ஊரில் உள்ள கோயிலுக்கு‍ செல்லும் போது‍ விசாரித்துவிட்டு‍ செல்லவும். (குறிப்பாக வால்பாறைக்கு)